மே - 17 நெல்லை பதிவர் சந்திப்பில் என்ன நடக்கும்?
ரயில்வே ஜங்சனில் முக்காடு போட்டுக்கொண்டு மெதுவாக குறுகுறுவென பார்க்கிறார் மனோ. "நல்லவேளை, கடன் கொடுத்தவன் எவனும் கண்ணுல தட்டுப்படல. அப்படியே ஹோட்டல் ஜானகிராம் உள்ள பதுங்கிடுவோம்" என எண்ணிய அடுத்தநொடி...ஒரு அருவா அவர் முதுகை சொறிகிறது. "எலேய் மக்கா சத்த நில்லு" என ஒரு குரல் பீதியை கிளப்ப..வேர்த்து விறுவிறுக்க திரும்பி பார்க்கிறார். "இம்சை அரசா..நீயா..ஏன் இப்படி வவுத்த கலக்குற. என்ன அப்படியே பொத்துனாப்புல ஹோட்டலுக்குள்ள கொண்டு போயிரு" என்று பாபு காலின் சுண்டு விரலை இழுத்து பிடித்து கேட்கிறார். ஹோட்டல் வாசலில் இருவருக்கும் அனுமதி மறுக்கும் காவலாளி "சாரி சார் பொக்கே கொண்டு வந்து வாழ்த்து சொல்றவங்களை மட்டும் அனுமதிக்க சொல்லி இருக்கார் சங்கரலிங்கம் சார்". அந்த நேரம் பார்த்து கவிதை வீதி சௌந்தர் சுட்டெரிக்கும் சூரியனை வைத்த கண் வாங்காமல் பார்த்து கவிதை எழுத, அப்படியே அவர் கையில் இருக்கும் பொக்கேவை லவட்டிக்கொண்டு உள்ளே செல்கின்றனர் இருவரும்.
"அப்படியே ஓரமா நிறுத்துப்பா லாரிய" என்று கத்தும் சத்தத்தை கேட்டு வெளியே வருகிறார் 'உணவு' சங்கர். "ஹல்லோ சி.பி. எப்படி இருக்கீங்க" என கேட்க "கில்மாவா இருக்கேன் சார்" என்றவாறு அருகில் இருக்கும் மளிகைக்கடை அண்ணாச்சியிடம் கைகொடுக்கிறார் சி.பி. "அய்யா தயவு செஞ்சி கூலிங் கிளாசை கழட்டுங்க. நான் இங்க இருக்கேன்" என வீறிடும் சங்கர் "எதுக்குங்க லாரி?" என்கிறார். அதற்கு சி.பி. "மொத்தமும் நாட்டு தக்காளி சார். தக்காளி அந்த நாஞ்சில் மேல எறியத்தான்". சங்கர் "அது உங்க இஷ்டம். ஆனா இந்த தக்காளி எல்லாம் தரமானதுதானா? ஏம்பா, ஒரு தக்காளி விடாம செக் பண்ணுங்க. கலப்பட தக்காளி இருந்தா எல்லாத்தையும் ஆத்துல கொட்டுங்க" என ஆர்டர் போடுகிறார். கடுப்புடன் உள்ளே சி.பி. நுழைகிறார்.
"ஒசரமா இருக்குறவங்க தயவு செஞ்சி பின்னால உக்காருங்க. இல்லன்னா இந்த கழுகை விட்டு உங்க மூக்கை கொத்த விட்டுடுவேன்" என வேடந்தாங்கலில் இருந்து கொண்டு வந்த பெரிய சைஸ் பறவையை காட்டி அனைவரையும் பயமுறுத்துகிறார் கருன். ரோல்ஸ் ராய்ஸ் காரில் இருந்து மின்னலென இறங்கி மேடைக்கு வருகிறார் சித்ரா. "ஹாய் மக்காஸ். ஹாப்பி வீக்கென்ட் டு எவெரிபடி" என கை அசைக்கிறார். "மேடம், இன்னிக்கி வெள்ளிக்கிழமை" என்று ஒரு அசரீரி கேட்கிறது. அது வேறு யாருமல்ல, நம்ம நிரூபன்தான். "சகோ(தரி), லைவ் ப்ரோக்ராம் தொடங்கப்போகுது. சக்கரை புக்கை தயார் ஆகிடுச்சான்னு பாருங்கோள்".
"என்னாது சக்கரை புக்கையா? ஓடுலே மக்கா ஓடுலே" என்று சி.பி.யை தள்ளி விட்டு ஓடுகிறார் மனோ. லேனா தமிழ்வாணன் அன்பளிப்பாக குடுத்த கூலிங் கிளாஸ் உடைந்ததில் மனம் வெம்பியவாறு பந்தியை நோக்கி சிபி செல்ல அனைவரும் பின்தொடர்கின்றனர். அந்த நேரம் பார்த்து கரண்ட் வேறு கட் ஆகிவிட வேர்த்து வழிய அனைவரும் இலையை பார்த்தவண்ணம் உள்ளனர். முதலில் சக்கரை புக்கை, பிறகு அவியல், பொரியல் செம மெனு. மனோவின் கர்சீப்பை திருடி முகத்தை துடைத்துவிட்டு மீண்டும் அதே இடத்தில் வைக்கிறார் சிபி. முதல் உருண்டை சோற்றை உள்ளே தள்ளும் நேரம் ஒரு கை தடுக்கிறது மனோவை. அவர்தான் தமிழ்வாசி பிரகாஷ், "சார் பஹ்ரைன்ல வெயில் எத்தனை டிகிரி? உங்க ஊரு ஹோட்டல்ல குஷ்பு இட்லி கிடைக்குமா? தலைல டை அடிச்சிட்டு கழுத்துல டை கட்டுறது ஏன்?" என பேட்டிக்கான கேள்விகளை அடுக்குகிறார்.
"தம்பி கடைசியா பஹ்ரைன் பார்டர்ல சாப்பிட்டது. செம பசில இருக்கேன். ப்ளீஸ்" என கெஞ்சிக்கதறுகிறார் மனோ. பாவம் என்று பிரகாஷ் அவரை ரிலீஸ் செய்கிறார். எல்லாரும் உண்ண ஆரம்பிக்கும் நேரம் ஓடி வருகிறார் ஆபீசர் சங்கர். "சாப்பிடாதீங்க நிறுத்துங்க. இங்க நிறைய பேர் கையை டெட்டால் போட்டு கழுவலை. பின்கீயா, கஜ்மோயா போன்ற பாக்டீரியா இருக்கும். கைய கழுவிட்டு வாங்க" என்கிறார். மனோவுக்கு மண்டை காய்கிறது "ஏங்க ஆபீசர். உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா. அந்நியன் அம்பி மாதிரி இப்படி டார்ச்சர் பண்றது என்ன நியாமுங்க ஆபீசர்" என்று கண்கள் சிவக்க பார்த்துவிட்டு செல்கிறார். கைகளை சுத்தம் செய்துவிட்டு அனைவரும் ஒரு வழியாக உண்டு முடிக்கின்றனர்.
மனோ மட்டும் முதலில் சாப்பிட்டுவிட்டு கீழே வந்து அமர்கிறார். இதுதான் தருணம். சி.பி.யின் கோக்குமாக்கான மூளை வேலை செய்ய ஆரம்பிக்கிறது. பின் பக்க சுவர் ஏறி குதித்து லாரியில் இருக்கும் தக்காளிகளை அள்ளி மனோ மீது கொலைவெறியுடன் வீச ஆரம்பிக்கிறார். "அய்யய்யோ.. மக்கா.. காப்பாத்துலே காப்பாத்துலே" என்று மனோ கூவ, மேலே இருந்து அனைவரும் கைதட்டி சந்தோசமாக வேடிக்கை பார்க்கின்றனர். சித்ரா அவர்கள் "இப்படித்தான் அட்லாண்டால தக்காளி திருவிழா அடிக்கடி நடக்கும்" என்று சொல்ல, இம்சை அரசன் பாபு மனோவுக்கு அரிவாளை தூக்கி எறிகிறார். வெறிகொண்ட வேங்கையாக சிபியை நெல்லை வீதிகளில் மனோ துரத்துகிறார். அந்த வழியில் திரிஷா ஷூட்டிங் நடப்பதை கண்ட சிபி "என்ன மேடம் இங்க?" திரிஷா "சாமி படம் ஹிந்தில எடுக்கறாங்க" என்கிறார். அவரை மொபைலில் போட்டோ எடுத்துக்கொண்டே ஒலிம்பிக் 100 மீட்டர் வேகத்தில் ஓட்டம் பிடிக்கிறார் சிபி.
அவரை பிடிக்க முடியாத கடுப்பில் பங்கு ஆட்டோ பிடித்து ஹோட்டலுக்கு வருகிறார் மனோ. மேடையில் மைக்கை பிடிக்கும் சங்கர் "இந்த சந்திப்பு நல்லா நடக்கும். அதுல சந்தேகம் இல்ல. அடுத்த வருஷம் எங்க மீட் பண்ணலாம்?" என்று கேட்கிறார். லைவாக நிரூபன் வருகிறார், "சகோ. அடுத்த மீட்டிங்கை அமெரிக்கால வைப்போம். அனைவரும் டிஸ்னிலான்ட் போவோம். சித்ரா அக்கா செலவு செய்வார்கள்" என்று சொல்ல, தலை சுற்ற ஆரம்பிக்கிறது மேடமுக்கு "அடப்பாவி நிரூபா. டிஸ்னிலான்ட் என்ன தமிழ்நாட்ல இருக்குற குவீன்ஸ்லாண்டுன்னு நினைச்சியா? நான் என்ன மனோ மாதிரி மல்டி மில்லியனரா?. எல்லாரும் பஹ்ரைன்ல அவர் ஹோட்டலுக்கு போயி ஓசில ஸ்டே பண்ணலாம்" என் மனோவை கோர்த்துவிடுகிறார் சித்ரா.
அனைவரும் மனோ இருக்கும் திசையை நோக்க நெல்லை பார்டரை தாண்டி ஸ்பைடர்மேன் போல பறந்து காணாமல் போகிறார் அண்ணன்!
மீண்டும் 2012 - ல் பஹ்ரைன் மனோ ஹோட்டலில் சந்திப்போம்.
............................................................................
கற்பனை: