Monday, November 7, 2011

கலக்கல் நண்பா, நல்ல பகிர்வு, சாட்டையடி


                                                                    
"டேய்..என்னடா பீச்ல உக்காந்துட்டு இருக்க. நம்ம சித்தப்பாவுக்கு சீரியஸ்னு ஹாஸ்பிடல்ல சேத்துருக்காங்க. சீக்ரம் வா போலாம்"

"தகவலுக்கு நன்றி"

"நன்றியா? அண்ணன்கிட்ட எதுக்குடா இதெல்லாம்? எந்திரி..வா..வா.."

கடற்கரை அருகே மீனை ஏலம் விட்டுக்கொண்டு இருந்தனர் சில மீனவர்கள். 

"இன்று என் வலையில்" என தம்பி கத்த, அதைக்கேட்டு சிலர் மீன் வாங்க நம்மாளை சூழ்ந்து கொள்கின்றனர். "ஏங்க..இவன் மீன் பிடிக்கறவன் இல்லைங்க. தயவு செஞ்சி போங்க. ஏண்டா இப்படி பேசிக்கிட்டு இருக்க? நடடா.." என்கிறார் அண்ணன். சில அடிதூரம்தான் கடந்து இருப்பார்கள். 

அப்போது ஒரு பஜ்ஜிக்கடையில் முதலில் போட்ட வடையை சாமி படம் அருகே வைத்து விட்டு வேலையை தொடர்கிறார் வியாபாரி. நம்ம ஆள் அந்த வடையை எடுத்து "முதல் வடை எனக்கே" என்று கூறி லபக்கென வாயில் போட்டுக்கொள்கிறார். வெறியான வியாபாரி ஓடி வந்து பஜ்ஜி சுடும் கரண்டியால் அவர் தொப்புளில் பழுக்க சூடு போடுகிறார். 

அண்ணன் "அடப்பாவி. உனக்கு என்னடா ஆச்சி? மானத்த வாங்கற?"

"முதல் முதல், முதல் மணல், முதல் அலை, முதல் பஜ்ஜி, முதல் கடைசி"

அண்ணன் செய்வதறியாமல் தவிக்கிறார். 'சித்தப்பா பெட்டுக்கு பக்கத்ல இவனுக்கு ஒரு பெட்டை ரெடி பண்ணனும் போல இருக்கே'. இருவரும் பஸ் ஸ்டாப்பை அடைகிறார்கள்.சில நொடிகள் கழித்துப்பார்த்தால் தம்பியைக்காணவில்லை. அருகில் இருக்கும் கோவிலில் செம கூட்டம். 'அட அங்க இருக்கான் தம்பி. சித்தப்பா சீக்கிரம் குணம் ஆக சாமியை வேண்டிக்கறான் போல'. 

"உன் நல்ல மனசுக்கு நீ நூறு வருஷம் நல்லாருப்படா தம்பி. என்ன கும்புட்ட?"

கோவிலில் குடுத்த உண்டைக்கட்டியை காட்டியவாறு தம்பி சொல்கிறான்:

"நல்ல பகிர்வு"

மீண்டும் டென்ஷன் ஆகி அவனை பஸ்ஸில் ஏற்றுகிறான் அண்ணன். 

"டேய்..ஏழெட்டு காலேஜ் பொண்ணுங்க ஏறி இருக்காங்க. சென்ட் வாடை தூக்கலா இருக்கு. எதுக்கும் கொஞ்சம் தள்ளியே நில்லு"

"தமிழ் மணம் 7"

கொஞ்ச தூரம் வந்ததும் ஸ்டேஜ் போடப்படுகிறது. பிதுங்கி வழியும் கூட்டத்தில் வேர்க்க விறுவிறுக்க நடத்துனர் டிக்கட் கிழித்துக்கொண்டிருக்க...

"ரைட்டு" என்கிறார் நம்மாள். வண்டி கிளம்ப..நடத்துனர் கத்த ஒரே கூத்து. அண்ணன் இவனின் வாயைப்பொத்தியவாறு பயணம் செய்கிறார். ஸ்டாப் வந்துவிட்டது. "இருடா. லேடீஸ் மொதல்ல எறங்கட்டும். வெள்ளை சுடிதார் போட்டு இருக்காங்களே..அவங்க பெண் போலீஸ். அவங்கள இறங்க விடு". தம்பி பெண் போலீசின் உடையைப்பார்த்து "நல்ல அலசல், விரிவான அலசல்" என்று கூறித்தொலைக்க, அவன் வாயில் வெற்றிலை பாக்கு போடுகிறார் பெண் போலீஸ். "மேடம், இவன் என் தம்பிதான். மன்னிச்சிடுங்க" என்று சமாதானம் கூறி அனுப்புகிறான் அண்ணன். இருவரும் ஹாஸ்பிட்டலை அடைகிறார்கள். 

"டாக்டர், இப்ப சித்தப்பாவுக்கு எப்படி இருக்கு?"என அண்ணன் கேட்க, காண்டாக்ட் லென்சை கழட்டிவிட்டு சீலிங் பேனை ஒருமுறை பெருமூச்சு இட்டவாறு பார்த்துவிட்டு "ரொம்ப கஷ்டம். ஒண்ணும் செய்ய முடியாது" என்கிறார் டாக்டர். 

"கலக்கல் மச்சி" 

வந்த கோபத்திற்கு தம்பியின் காதில் பொளேரென்று வைத்தான் அண்ணன். 

"என்ன டாக்டர் இப்படி சொல்லிட்டீங்க. லட்சக்கணக்குல செலவு செஞ்சும் இப்படியா? வெளில நிறைய கடன் வேற வாங்கி இருக்கேன்" என்று அண்ணன் விம்மி விம்மி அழும்போது தம்பி அவனை தேற்றுகிறான். 

"என்னடா தம்பி. இருந்த வேலையையும் விட்டுட்டு வி. ஆர். எஸ். வாங்கிட்டேன். அதுவும் ஆஸ்பத்திரிக்கே செலவாயிடுச்சி. சோத்துக்கு கூட இப்ப வழி இல்லையேடா. என்ன செய்யலாம்? " 

"சாட்டையடி"

"என்னது சாட்டையடிச்சி சம்பாதிக்கவா? உனக்கு என்ன கொழுப்புடா?" என்று அருகில் இருக்கும் குளுக்கோஸ் பாட்டிலை எடுத்து அவன் கபாலத்தில் சொருகுகிறார்.    
................................................................................................................. 


..................................
Posted by:
! சிவகுமார் !
..................................