Wednesday, December 4, 2013

புத்தகக் காட்சி பதிவின் டெம்ப்ளேட் – புதியவர்களுக்காக


அன்புள்ள வலைப்பூவிற்கு,

பழைய ஆட்கள் அடுத்த பத்தியை ஸ்கிப் செய்துவிடலாம்.

பபாஸிகாரர்கள் சர்க்கஸ் ஆட்கள் போல ஊர் ஊராக சென்று டெண்ட் அடுத்தாலும் ஜனவரி துவக்கத்தில் சென்னையில் கொட்டாய் போடுவது ரொம்ப ஸ்பெஷல். நம்ம ஆட்களுக்கெல்லாம் அது ஒரு திருவிழா மாதிரி...! சிலரெல்லாம் பத்துநாள் கண்காட்சி என்றால் பத்துநாளும் அங்கேயே பழியாய் கிடப்பார்கள். ‘சென்னை புத்தகக் காட்சி – நாள் ஒன்று’ என்று துவங்கி தினசரி பதிவு போடுவார்கள். இதுல பியூட்டி என்னன்னா நம்ம ஆட்கள் வருடா வருடம் எழுதுகிற புத்தகக்காட்சி பதிவில் எல்லாமே ஒரே மாதிரியாக இருக்கும். சொல்லப்போனால் கிட்டத்தட்ட அதே பதிவை தலைப்பில் 35, 36’ன்னு நம்பர் போடுவாங்களே... அதை மட்டும் மாத்தி போஸ்ட் போடுவாங்க. அந்த பதிவோட டெம்ப்ளேட்டை தான் இங்கே சொல்லித்தர போகிறேன். முற்றிலும் புதியவர்களுக்காக.

முதல் பத்தி, ஆரம்பப்பள்ளி பருவத்தில் டாபிக் கொடுத்து கட்டுரை எழுதச் சொல்வார்களே நினைவிருக்கிறதா...? அதுபோல ‘புத்தகக்காட்சியும் நானும்’ என்கிற தலைப்பில் பத்து வரிகளுக்கு மிகாமல் ஒரு பத்தி எழுத வேண்டும். அதாவது, நீங்கள் எந்த ஆண்டிலிருந்து புத்தகக்காட்சி செல்கிறீர்கள்...? புத்தகக்காட்சிக்கும் உங்களுக்குமான இணக்கம் குறித்தெல்லாம் எழுதலாம். முக்கியமாக, புத்தகக்காட்சி முந்தைய ஆண்டுகளில் கா.மி. கலைக்கல்லூரியிலும், புனித ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நடைபெற்றதையும் குறிப்பிட்டு எழுத வேண்டும். 

அடுத்த பத்தியில், பு.கா அரங்க வாயிலிலிருந்து அரங்கம் வரை நீங்கள் நடந்து வந்ததை விவரிக்கலாம். எந்தெந்த எழுத்தாளர்களுக்கு தட்டி வைக்கப்பட்டுள்ளது...? எந்தெந்த ஜீ தமிழ் ஆண்ட்டிகள் பதாகைகளில் பல்லிளிக்கிறார்கள்...? எவ்வளவு கூட்டம் வந்திருந்தது...? சாலையிலிருந்து எவ்வளவு தூரம் நடக்க வேண்டியிருக்கிறது...? போன்றவைகளை குறித்துக்கொள்ளவும். அதன்பிறகு, சமகாலத்தில் மக்களிடையே வாசிப்பு குறைந்துவிட்டது. வெறும் ஆனந்த விகடன், குமுதம் மட்டும் படிக்கிறார்கள் என்பது போல எழுதி ஜல்லியடிக்கலாம். 

மெயின் மேட்டருக்கு வருவோம். முதல் வேலையாக மீனாட்சி புத்தக நிலையம் சென்று அங்கிருக்கும் சுஜாதாவின் மலிவு விலை புத்தகங்களை மொத்தமாக மூட்டை கட்டி வாங்கிவிட வேண்டும். வாங்கி அதை கமுக்கமாக வீட்டில் வைத்துவிட்டு வலைப்பதிவில் அதைப்பற்றி ஜம்பமடிக்கலாம். நாம படிக்கப்போறது ஒரு புஸ்தகம். எதுக்காக மூட்டை கட்டணும் என்றெல்லாம் கேட்கப்பிடாது. ஆனால் அங்கே இருக்கும் புஸ்தகங்களை காலி செய்துவிட்டோம் என்று உறுதியாக தெரிந்தபிறகு வலைப்பதிவில் இந்த மாதிரி இந்த மாதிரி ஸ்டால் நம்பர் 68ல் விற்பனை செய்யப்படுகிறது என்று ஒரு தகவல் கொடுக்கலாம்.

புத்தகக்காட்சி அலைச்சலில் உங்களுக்கு ஒன்னுக்கு வரலை என்றோ இளநியில தண்ணி வரலை என்றோ கவலைப்பட வேண்டாம். இருக்கவே இருக்கிறது லிச்சி ஜூஸ். ச்சே என்னதான் காலம் மாறிக்கிட்டே போனாலும் இந்த லிச்சி ஜூஸ் மட்டும் மாறாம இருக்கு பாத்தியா...? என்று நன்றாக வியாக்கியானம் பேசலாம். வலைப்பதிவில் லிச்சி ஜூஸ் எவ்வளவு...? எங்கே கிடைக்கிறது...? என்ற தகவலைக் கொடுத்து லிச்சி ஜூஸ் வாங்கலையோ லிச்சி ஜூஸ் என்று கூவலாம். கவலை வேண்டாம் லிச்சி ஜூஸ் விற்பனையாளர் பத்து சதவிகித லாபத்தை உங்களுக்கு கொடுத்துவிடுவார். ஆனந்த விகடன் மாதிரி மரியாதை தெரியாத ஆளு இல்லை.

அப்படியே கூடாரத்தை ஒருமுறை சுற்றிவந்து விட்டு பாப்பா ரைம்ஸ் கடைகள், வேர்க்கடலை சட்னி, தேங்காய் சட்னி, புதினா சட்னி கடைகள், விகடன், கிழக்கு என்று ஒரு அப்டேட் கொடுக்கலாம். இதில் முக்கியமான பகுதி என்னவென்றால், சமையல் குறிப்பு புத்தகங்கள் வாங்கும் அங்கிள்களை’யும், கோல புத்தகம் வாங்கும் ஆண்ட்டிக்களையும் சரமாரியாக கலாய்த்திட வேண்டும்.

இன்னொரு ப்ரோமோவை மறந்துவிட்டேன். காமிக்ஸ்...! பழைய போனியாகாத காமிக்ஸ்களை மூட்டை மூட்டையாக கட்டி காம்போ பேக்குகள் போல வைத்து பேக்குகள் போல இருப்பவர்கள் தலையில் கட்டுவார்கள். அதனை மறந்தும் வாங்கிவிடக்கூடாது. ஆனால் இந்த ஸ்டால் எண்ணில் காமிக்ஸ் விற்கப்படுகிறது. குறைந்த அளவே ஸ்டாக் உள்ளது. முந்துபவர்களுக்கே முன்னுரிமை என்று வலைப்பதிவில் அடித்துவிடவும். ஆனால் இன்னும் பத்து வருடங்கள் ஆனாலும் அந்த பழைய காமிக்ஸுகள் தீரவே தீராது. இதிலும் விளம்பரம் செய்பவர்களுக்கு கமிஷன் உண்டு.

முக்கியமான பகுதி, டிஸ்கவரி புக் பேலஸ் ஸ்டால் வாசலுக்கு சென்று நின்றுக்கொள்ள வேண்டும். அங்கே போகிற வருகிறவர்களை எல்லாம் பிடித்து நீங்க பட்டர்ஃபிளை தானே, யேய் அங்கப் பாரு பிபாஷா, பைத்தியக்காரன் வந்திட்டாரு, பிச்சைக்காரன் எங்கப்பா....? என்றெல்லாம் பொது ஜனத்துக்கு புரியாத பாஷையில் பினாத்திக்கொண்டு இருக்கவேண்டும். கடந்து செல்பவர்கள் நீங்கள் கண்டிப்பாக செலிபிரிட்டியாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் அளவிற்கு அலப்பறை கொடுக்க வேண்டும். இறுதியாக வேடியப்பன் சுடுதண்ணி பிடித்து மூஞ்சியில ஊத்துற வரைக்கும் காத்திருந்துவிட்டு நடந்த சம்பவங்கள் எல்லாவற்றையும் சுடுதண்ணி சம்பவம் முதற்கொண்டு வலைப்பதிவில் எழுதிவிட வேண்டும்.

அறச்சீற்ற பகுதி. பார்க்கிங் லாட்டில் பயங்கர கூட்டம், வண்டியை நிறுத்தவே இடமில்லை, அநியாயத்திற்கு கட்டணம் வசூலிக்கிறார்கள், அரங்கத்திற்குள் காற்றோட்டம் இல்லை, மக்கள் திரளை ஆர்கனைஸ் செய்வதில்லை, குடிநீர் வசதி போதுமானதாக இல்லை, கழிவறைகள் எங்கேயிருக்கிறது என்றே தெரியவில்லை. ஃபுட்கோர்ட்டில் காசை கொள்ளையடிக்கிறார்கள், நான்கு போண்டா ஐம்பது ரூபாய் என்பது வரைக்கும் பொங்கித்தள்ள வேண்டும்.

இறுதியாக, நீங்கள் வாங்கிய புத்தகங்களின் பட்டியல். கவனம்: பட்டியலில் வெளியிடப்போகும் புத்தகங்களை நீங்கள் வாங்க வேண்டும் என்றோ வாங்கினால் படிக்க வேண்டும் என்றோ அவசியமில்லை. சும்மா போட வேண்டியது தான். அதுக்காக வாழைக்காய் பஜ்ஜி செய்வது எப்படி...?, வல்லாரைக் கீரை தரும் பலன்கள் என்றெல்லாம் லுச்சாத்தனமாக லிஸ்ட் போடக்கூடாது. புத்தக டைட்டில்களை படித்ததும் அவனவன் கழிந்துவிட வேண்டும். உதாரணமாக, முட்டை போண்டாக்கள் உருண்டையாகத்தான் இருக்கின்றன, ஒரு ஆயாவும் ஆந்தையும், கரப்பான்பூச்சிகளை புணர்ந்தவன் போன்ற தலைப்புகளை லிஸ்ட் போடலாம்.

Get ready folks...!

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN