Friday, October 11, 2013

யார் அடுத்த கேபிள் சங்கர் ?


கேபிளார் பதிவர் என்ற நாற்காலியை விட்டகன்று இயக்குநர் நாற்காலியில் துண்டைப் போட்டுவிட்டார். அன்னார் விட்டுச் சென்ற நாற்காலி சும்மாத்தானே இருக்கிறது. அங்கே அடுத்ததாக உட்கார தகுதியுள்ள வலைப்பதிவர் யாரென்று ஒரு அலசல். அடப்பாவிகளா ரெண்டு வாரம் கொத்து பொரோட்டா போடல’ன்னா ஃபீல்ட் அவுட்டா என்றெல்லாம் அலறக்கூடாது. இது சும்மா ஜாலிக்காக...!

முதலில் கேபிளாரைப் பற்றி நல்ல வார்த்தைகளாக நான்கைச் சொல்வோம். அதுதானேய்யா ஒலகவழக்கம். பதிவுலகம் நிறைய திறமைசாலிகளை கண்டிருக்கிறது. அவர்கள் ஒட்டுமொத்தத்திலும் கேபிளார் தான் ஆகச்சிறந்த படைப்பாளர் என்று சொன்னால் சாமி கண்ண குத்திடும். கேபிளை விட பல திறமையான வலைப்பதிவர்கள் நம்மிடையே இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள். ஆனாலும் கேபிள் தான் தி மோஸ்ட் பாப்புலர். கேபிளின் இந்த புகழிற்கு இரண்டு முக்கியமான காரணங்களைச் சொல்லலாம். ஒன்று கன்சிஸ்டென்சி. நான்கைந்து வருடங்களாக தொடர்ந்து எழுதிக்கொண்டே இருப்பதெல்லாம் வாயில் சொல்வதற்கு மட்டும் வேண்டுமானால் சுலபமாக இருக்கலாம். அதனை சாதித்துக் காட்டியவர் கேபிள். இரண்டாவது, காண்டாக்ட்ஸ். நேற்று வலைப்பூ தொடங்கிய குரங்கு குப்பனிடம் கூட ஈகோ காட்டாமல் பழகுவார், சார் ஒஸ்தாரா பாட்டுக்கு காஜலை விட சிறப்பாக ஆ(ட்)டிக் காட்டுவார். அதனாலேயே கேபிளுக்கு வாசகர்கள் அதிகம்.

இவ்விரண்டு விஷயங்களைத் தாண்டி இன்னொரு விஷயம் இருக்கிறது. பொதுவாக பதிவுலகில் கேபிளை தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாரோடு ஒப்பிடலாம். இப்போது வேண்டுமானால் நீங்கள் முந்தய பத்தியை சூப்பர் ஸ்டாரை மனதில் வைத்து ஒருமுறை படித்துக்கொள்ளலாம். தமிழ் சினிமாவில் எந்த நடிகர் – நடிகையாக இருந்தாலும் ரஜினியை எனக்கு பிடிக்காது என்று சுலபமாக சொல்லிவிட முடியாது. அதுபோல தான் கேபிளும். இருவரும் வயதானாலும் இன்னமும் ‘யூத்து’ என்று சொல்லிக்கொள்பவர்கள். கேபிளின் சூப்பர்ஸ்டார் பிம்பத்தைப் பற்றி தனிப்பதிவாக கூட எழுதலாம் ஆனால் இதற்கு மேல் எழுதினால் கேபிளின் அடிபொடிகள் நம் வாயில் கத்தியை விட்டு சுற்றுவார்கள் என்பதால் நிறுத்திவிட்டு நேரடியாக பதிவுக்கு செல்கிறேன்.

மணிகண்டனை இந்த பட்டியலில் சேர்த்திருக்கிறோம் என்கிற விஷயம் அவருக்குத் தெரிந்தால் உதைக்க வந்தாலும் வருவார். ஏனெனில் அவர் ஏற்கனவே உயிர்மையில் புத்தகம் வெளியிட்டு, சுஜாதா விருதெல்லாம் வாங்கி, மனுஷ், சாரு போன்ற கெடா மீசைகளுடன் மல்லு கட்டுபவர். ஆனால் ஏனோ தற்போது பதிவுலகில் தீவிரமாக இயங்கி வருவதால் அவரை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்கிறோம். மணிகண்டன் தன்னுடைய வாசகர்களால் ‘ஜூனியர் மண்ட’ என்று அன்போடு அழைக்கப்படுபவர்.

ப்ளஸ்: சுஜாதா பாணி எழுத்து நடை, ஒரு வரி செய்தியைக் கூட சுவாரஸ்யமான கட்டுரையாக்கி விடும் லக்கிலுக்குத்தனம், ஒன்றரை வருடங்களாக தொடர்ச்சியாக எழுதி வருவது, மேல்மட்ட குழுவுடன் நட்பில் இருப்பது.

மைனஸ்: கீழ்நிலை வாசகர்களிடமிருந்து விலகியிருப்பது, ஒரே மாதிரியாக எழுதிக்கொண்டே இருப்பது, எவன் என்ன சொன்னால் எனக்கென்ன என்கிற ரீதியில் கெத்து காட்டிவிட்டு ரோட்டில் ஆட்டோக்கார் சாவுகிராக்கி என்று திட்டினால் கூட ஒரு புலம்பல் இடுகை போடுவது.

கேபிளைப் போலவே சமகாலத்தில் கொஞ்சம் பிஸியாக இருப்பவர். எனினும் அதற்காகவெல்லாம் அவரை அவ்வளவு எளிதாக புறக்கணித்துவிட முடியாது. பதிவுலகில் கொஞ்சம் சீனியர் என்றாலும் கடந்த இரண்டரை வருடங்களாக தொடர்ந்து எழுதி வருபவர். தமிழ்மணத்தை கிட்டத்தட்ட ஓராண்டு காலம் ஒன் மேன் ஆர்மியாக ஆட்சி செய்தவர். பதிவுலகில் இயங்கிவரும் பல குழுக்களுடன் நண்பராக பழகி வருவதாக சொல்லிக்கொல்பவர்.

ப்ளஸ்: வெரைட்டியாக எழுதுவது, ஒரு விஷயத்தைப் பற்றி எழுதும்போது தன்னுடைய கருத்தை மட்டும் சொல்லாமல் கழுகு பார்வை பார்த்து வாசகர்களை மனதில் கொண்டு எழுதுவது, பதிவு எழுத செலவிடும் உழைப்பு, நிறைய பேரிடம் நட்பு பாராட்டுதல்.

மைனஸ்: தொடர்ச்சியாக எழுதுவதால் குறைந்து வரும் எழுத்துத்தரம், சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் டென்ஷன் ஆவது, நீங்க என்ன பாராட்டுறீங்களா ஓட்டுறீங்களா என்று சோபிக்கண்ணு மாதிரி கேட்பது.

யெஸ், தி ஒன் அண்ட் ஒன்லி மெட்ராஸ் பவனார். சிவகுமாருக்கும் கேபிளுக்கும் நிறைய விஷயங்களில் ஒத்துப்போகும். இருவருமே சினிமா ஸ்பெஷலிஸ்ட்ஸ். கேபிளைப் போலவே காண்டாக்ட்ஸை நிறைத்து வைத்திருக்கும் வித்தகர். கடந்த மூன்று வருடங்களாக நிதானமாகவும் நிலையாகவும் பதிவுலகில் வளர்ந்து வருபவர். பதிவுலகில் கிட்டத்தட்ட எல்லோருமே நல்ல மனுஷன்யா என்று சொல்லுமளவிற்கு பெயர் பெற்றவர். எல்லாவற்றையும் விட முக்கியமானது, இருபெரும் ‘கே’ பதிவர்களின் ஆசி பெற்றவர்.

ப்ளஸ்: சினிமா சார்ந்த பதிவுகள், எந்த டாப்பிக் கொடுத்தாலும் அதைப்பற்றி குறைந்தபட்சம் ஒண்ணேமுக்கால் மணிநேரமாவது தம் கட்டி பேசுவது, இயல்பாக வெளிப்படும் நகைச்சுவையுணர்வு, எல்லோரிடமும் எளிமையாக பழகி நட்பு பாராட்டுவது.

மைனஸ்: திறமையிருந்தும் சினிமா தவிர்த்து பிறதுறை சார்ந்த பதிவெழுத முயற்சி செய்யாதது, ‘பாரம்பரிய’ பதிவர்களிடமிருந்து விலகியிருப்பது, எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்க நினைப்பதால் சில சமயங்களில் எந்த பக்கம் ஸ்டாண்ட் எடுப்பது என்று புரியாமல் குழம்பி நிற்பது.

ரைட்டு. வாசகர்கள் இம்மூவருள் தங்கள் மனதைக் கவர்ந்தவர் அல்லது அடுத்த கேபிள் என்னும் சொல்லிற்கு யார் தகுதியானவர் என்ற தங்களுடைய கருத்தை பின்னூட்டத்தில் பதிவு செய்யலாம்.

வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படும் பட்சத்தில் தொடரும்

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN