Thursday, November 14, 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்


ஓநாயும் ஆட்டுக்குட்டியும் வெளிவந்து ஒன்றரை மாதங்கள் ஆனபிறகு நேற்று அதனைப் பற்றி மூன்று அருமையான கட்டுரைகள் படிக்கக் கிடைத்தன.

1. வெகுளித்தனமல்ல அறியாமையின் கொடூரம் – ராஜன் குறை (காட்சிப்பிழை நவம்பர் 2013)
2. ஓநாயும்ஆட்டுக்குட்டியும் தவளைகளும் – ரோஸாவசந்த் (காட்சிப்பிழை நவம்பர் 2013)

மூவருக்கும் ‘மூக்கு’ புடைப்பாக இருக்கக்கூடும் என்பது என்னுடைய ஆகச்சிறந்த அவதானிப்பு. ஏன் சொல்கிறேன் என்றால் மூன்றுமே நல்ல கட்டுரைகள் என்றாலும் படித்ததும் சட்டென புரிந்துக்கொள்ள முடியாத அளவிற்கு ‘சொயட்டி சொயட்டி’ எழுதியிருக்கிறார்கள். யாருக்குமே புரியாம எழுதி அப்படி என்னடாப்பா சாதிக்க போறீங்க ? சுரேஷ் கண்ணன் நம்மாளு தான். முன்பெல்லாம் நல்லாத்தான் எழுதிக்கொண்டிருந்தார். யாரோ அவரை உயிர்மை, தயிர்மை’ன்னு செமயா ஏத்தி விட்டிருக்காங்க. இப்பல்லாம் மனிதர் புல்ஸ்டாப் வைக்காம ஒரே வாக்கியத்துல ஒரு நான்கு பக்க கட்டுரையை கட்டமைக்க முயன்றுக்கொண்டிருக்கிறார்.

சரி, கம்மிங் டூ த மேட்டர். நாம் பார்க்கும் திரைப்படங்கள் எதார்த்த வாழ்க்கைக்கு நெருக்கமாக இருப்பதையே நம்மில் நிறைய பேர் விரும்புவோம். ஃபேண்டசி, ஹாரர் போன்ற சில ஜானர்களை தவிர்த்து மற்ற படங்களில் லாஜிக் இருக்க வேண்டும் என்றே விரும்புகிறோம். ஆனால், பெரும்பாலும் தமிழ் சினிமாவின் கமர்ஷியல் சினிமாக்களில் அது இருப்பதே இல்லை. இல்லையென்பது கூட பரவாயில்லை, லாஜிக் இல்லையென்பதை சுட்டிக்காட்டுவதே பெரிய தவறாகி விட்டது. இணையத்தில் புழங்குபவர்களே ஏதோ இயக்குநருடன் ஒரே தட்டில் சாப்பிட்டவர்கள் போல தம் கட்டி வாதாடுகிறார்கள். மாஸ் படத்தில், மசாலா படத்திலெல்லாம் லாஜிக் பார்க்கக்கூடாதாம் ! எக்கேடோ கெட்டு ஒழியட்டும்.

ராஜன் குறை தன்னுடைய கட்டுரையில் ஒரு விஷயத்தை குறிப்பிட்டிருக்கிறார் :- தர்க்கரீதியான கேள்விகளையெல்லாம் வெகுஜன சினிமாவில் கேட்கக்கூடாது என்பது நியாயம்தான். ‘சிவாஜி தி பாஸ்’ படத்தில் தன்னைத்தானே எலக்டிரக்யூட் செய்துகொண்ட ரஜினியை அரைமணிநேரம் கழித்து நெஞ்சில் அயர்ன் பாக்ஸ் வைத்து பூப்போல ரகுவரன் காப்பாற்றவில்லையா ? அது மட்டும் நியாயமா என்று நீங்கள் கேட்கலாம். சரி அப்படிப்பட்ட மசாலா படம் தான் இது என்றால் கலையோ கலை என்று கூப்பாடு போடுகிறார்கள் என்றுதான் புரியவில்லை.

ராஜனின் மேற்கூறிய வரிகளிலிருந்து துவங்குகிறேன். ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு நல்ல பொழுதுபோக்கு சித்திரம் என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்துமில்லை. ஆனால் திடீரென ஏன் உலக சினிமா, கலை, பின்நவீனத்துவம் என்றெல்லாம் ஜல்லியடிக்கிறார்கள். அப்படியெல்லாம் சொல்லுமளவிற்கு ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் என்னதான் இருக்கிறது எனக்குப் புரியவில்லை. மூன்று கட்டுரைகளிலிருந்தும் எனக்குத் தெரிந்த தமிழில் நான் புரிந்துக் கொண்டவைகளை மட்டும் தொகுத்து சில கேள்விகளை முன் வைக்கிறேன். ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தை சிலாகிப்பவர்கள் பதில் சொல்லட்டும்.

1. ஒரு மனிதன் குண்டடி பட்டிருக்கிறான். அது உடலின் ஏதோவொரு பாகத்தில் பாய்ந்திருக்கிறது. குண்டை வெளியே எடுத்து ரத்த சேதத்தை நிறுத்தி கட்டு போட்டால் உயிர் காப்பாற்றப்படும். எதற்காக spleenஐ வெளியே எடுக்க வேண்டும் ? ஸ்ப்ளீன் கோபத்தின் பிறப்பிடம் என்று தவறாக நம்பப்பட்டதன் அடிப்படையில் அது குறியீடாக இருக்கிறதா ? ஸ்ப்ளீன் என்பது ரத்தத்தை சுத்திகரிப்பு செய்யும் உறுப்பு. அதில் போய் குண்டு மாட்டிக்கொண்டால் கடுமையான ரத்த சேதம் ஏற்படும். அந்த நிலையில் நோயாளியின் வயிற்றை அறுத்து ஸ்ப்ளீனை வெளியே எடுத்தால் ரத்த சேதம் அதிகரிக்கும். எனவே நோயாளிக்கு தேவை அவருடைய வகை ரத்தம். மாற்று ரத்தம் ஏற்பாடு செய்யாமல் ஸ்ப்ளீனில் அடிபட்டு அரைமணி நேரத்திற்கு மேல் உயிருக்கு போராடும் ஒருவனை எப்படி காப்பாற்ற முடியும் ?

2. மண்ணீரல் அகற்றப்பட்ட நபர் எட்டு நாட்களுக்குப்பின் எழுந்து நடமாடலாம் என்று படத்தில் இரு கதாபாத்திரங்கள் மூலம் சொல்லப்படுகிறது. ஆனால் உல்ஃப் ஆறாவது நாளிலேயே வெளியே வந்துவிடுவதாக கதை செல்கிறது. பிரச்சனை என்னவென்றால் உல்ப் அறுவை சிகிச்சை முடிந்து சில மணி நேரங்களுக்குள்ளாகவே சந்துருவின் வீட்டிலிருந்து வெளியேறி விடுகிறான்.

3. தன்னைக் காப்பாற்றிய சந்துரு என்கிற மருத்துவ மாணவனை வரவழைத்து, துப்பாக்கி காட்டி மிரட்டி, தன் உயிரை காப்பாற்றியனை பலவந்தமாக கடத்தி கொண்டு போகிறான்  வுல்ஃப்.  எதற்காகத்தான் அந்த பையனை கடத்துகிறான்? கதைப்படி அதற்கான தேவை என்ன? கதைப்படி வுல்ஃபின்  நோக்கம் யாருக்கும் எந்த சந்தேகமும் வராமல், கண்காணிப்பிற்கு ஆளாகாமல் அந்த அம்மா அப்பா ஆடுகளையும் குழந்தை ஆட்டுகுட்டியையும் அந்த 'ஹிந்திக்கார பார்ட்டி'யிடம் சேர்ப்பது; சேர்ந்து தானும் தப்பிப்பது; இடையில் கல்லறையில் ஒரு மெழுகுவர்த்தி பிரார்த்தனை. வுல்ஃப் ஆபேரேஷன் ஓய்வு நாட்கள் முடியும் முன்பு வெளியே வர மாட்டான் என்ற நம்பிக்கையில் போலீஸ் திவிரமாக கண்காணித்து கொண்டு இருக்க மாட்டார்கள். இடையில் ஆறாவது நாளே யாருக்கும் தெரியாமல் வுல்ஃப் தனது மேற்படி கடமையை முடிப்பது எளிதானது. ஆனால் அவனோ சந்துருவை கடத்துவதன் மூலம், ஒட்டுமொத்த போலீசின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பி, இரவுகளில் தான் இருக்கும் இடங்களை  ஊகிக்க விட்டு, தானிருக்கும் சுற்று வட்டாரத்தில் தேடவிட்டு, மாட்டிகொள்ளும் ரிஸ்க்கை காரணமே இன்றி எடுக்கிறான்.

4. ஒரு காட்சியில் ஓடிக்கொண்டிருக்கும் ரயிலிருந்து உடலில் காற்றடைத்த பையைக் கட்டிக்கொண்டு உல்ஃபும் சந்துருவும் குதிக்கிறார்கள். இந்த காட்சியை பார்க்கும்போது வடிவேலு மெத்தையை பாராசூட் போல கட்டிக்கொண்டு மாடியிலிருந்து குதிக்கும் நகைச்சுவை காட்சிதான் நினைவுக்கு வருகிறது. சரி, உல்ஃப் ஒரு சாகசக்காரன். அவன் அதையெல்லாம் அசால்டாக செய்வான் என்று வைத்துக்கொள்வோம். சந்துரு ? வெறும் தலையணையை மாரில் கட்டிக்கொண்டு குதித்தால் மூளை சிதறிவிடாதா ?

5. உல்ஃபின் நோக்கம் என்று பார்த்தால், அந்த அம்மா அப்பா ஆடுகளை, குழந்தை ஆட்டுக்குட்டியை காப்பாற்றுவது. மிஷ்கின் கண்ணிமைக்காமல் சொல்லும் அந்த கதையின் படி, தம்பா கும்பலுக்கும் அந்த ஆட்டுக் குடும்பத்திற்கும் எந்த பிரச்சனையும் இல்லை. பிரச்சனையே இந்த ஓநாய் மனம் திருந்தி அவர்களுடன் தங்குவதுதான். கதையிலேயே அந்த குடும்பத்தை பார்த்துகொள்ள பாரதி அக்கா, இரவில் கூட பாட்டுப்பாடிக் கொண்டிருக்கும் கண்தெரியாதவர்கள் சமூகமே இருக்கிறது. அவர்கள் வாழ்வதற்கு கண் தெரியாததை தவிர  வேறு  பிரச்சனை இருப்பதாக தெரியவில்லை. விபத்து போன்ற சம்பவத்தில் மகன் இறந்த பிறகான  வாழ்க்கையில் இருக்கும் தீவிர பிரச்சனை இந்த ஓநாய்தான். இந்த ஓநாய் கூட இருப்பதால்தான்,  ̀வேட்டைக்கு வாவேட்டைக்கு வா…' என்று வற்புறுத்தும் தம்பா அந்த குடும்பத்திற்கும் பிரச்சனை தருகிறான்.

6. மூன்று ஆட்டுக்குட்டிகளை காப்பாற்றுவதற்காக படமெல்லாம் எத்தனை ஆட்டுக்குட்டிகளை பலி கொடுக்கிறார் உல்ஃப். “தண்ணி... தண்ணி...” என்று துடிக்கும் போலீஸ் அதிகாரி, “ஐயா” என்று விளிக்கும் போலீஸ் அதிகாரி, மேலும் சில போலீஸ்காரர்கள், பாரதி அக்கா, விஜயா ஃபோரம் மால் காவலாளி, கடைசியில் அம்மா அப்பா ஆட்டுக்குட்டிகள்.

ரோஸாவசந்த் கட்டுரையிலிருந்து சில பத்திகள் :

உண்மையிலேயே இது ஒரு சுவாரசியமான வெகுஜன திரில்லராக இருந்தால் அது தன்போக்கில் ஹிட்டாகியிருக்கும். மக்களின் ரசனையின்மையை  திட்டவேண்டிய அவசியமே இருந்திருக்காது. வெகுமக்களை கவராத ஒரு படத்தை ஊடகங்கள், ஆர்வக்கோளாறு கொண்ட இணைய எழுத்தாளர்கள், பலூன் வண்ணத்தை பார்த்து மயக்கியவர்கள், உண்மையிலேயே படத்தின் ஒரே உன்னதமான இளையராஜாவின் இசைக்கு ரசிகர்கள் எல்லாம் சேர்ந்து ஏதோ ஒரு சென்சேஷன் அலையை உருவாக்கி, தாங்களும் அதில் மிதந்து படத்தை இந்த அளவிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். 

படத்தில் குறியீடுகள் பொங்கி வழிவதாக என்னவெல்லாமோ வியாக்யானம் சொல்கிறார்கள். முதலில் ஒன்றை தெரிந்துகொள்ளவேண்டும். சினிமாநாவல், சிறுகதை போன்ற ஒரு கதையாடல் சார்ந்த கலையில் கதைதான் முதலில் முக்கியமானது. கதை தீவிர இலக்கியமாக மாறும் போதுதான் குறியீடு பற்றி பேசுவதில் அர்த்தம் உண்டு. கோபால்ஜி உபன்யாசம் மாதிரி   ̀அப்படி பார்க்க கூடாதுஇதெல்லாம் குறியீடு' என்பது உளரல்.  கதை என்பது நேர்கோட்டில் இல்லாமல் இருக்கலாம்; சிதறலாக துண்டு துண்டான உளரலாக இருக்கலாம்; கதை என்று நாம் கருதிக்கொண்டிருக்கும் எதுவும்  இல்லாமல் கூட ஒரு கதை இருக்கலாம்; அதிலும்  கதையாடலைத்தான் நாம் முக்கியப்படுத்த வேண்டுமே தவிர குறியீட்டை அல்ல. கதை எந்த பிரச்சனையும் இன்றி தன்னை நிறுவிய பிறகுதான், அதில் உள்ள குறியீடுகளை பற்றி பேசமுடியும். ஒருவேளை கதையல்ல, குறியீடுகள்தான் படம் என்றால்நம்மால் ஒரு கதாதர்க்கமாக சிந்திக்கவே முடியாமல், கதையை மனதில் உருவாக்கவே முடியாமல் படிமங்களாக மட்டும் காட்சிகள் நகர்ந்திருக்க வேண்டும். மேலும் பலர் சொல்லும் குறியீடுகள்  பொருந்துவதில்லை என்பதுடன், குறியீடுகளின் அர்த்தங்கள் ஒன்றுக்கு ஒன்று அபத்தமாக முரண்படுகிறது. 

யோசிக்க யோசிக்க ஒரு கட்டுரையில் அடக்க இயலாதபடி முடிவே இல்லாமல் இந்த படத்தின் பிரச்சனைகள் வந்துகொண்டே இருக்கின்றன. இவ்வளவு சொதப்பலான கதையம்சம் கொண்ட படத்தை எதற்காக இத்தனை பேர் பாராட்டுகிறார்கள்காமிக்ஸ் என்கிறார்கள்; விவிலியத்தில் இருந்து மேற்கோள் காட்டுகிறார்கள்; அதிகாரம் பற்றியது, சாதாரணன் அதிகாரத்துக்கு எதிராக எதிர்வினையாற்றுவது என்று என்னவெல்லாமோ சொல்கிறார்கள். இவர்கள் பொய்யாக பாராட்டவில்லை என்பதுதான் அதிக கிலியை உண்டு பண்ணுகிறது. படத்தில் ஒரு மயக்கம் இருப்பது உண்மை என்றாலும், கருத்து சொல்லும் முன், கருத்தை தனக்குள் உருவாக்கும் போது யோசிக்க மாட்டார்களா? இத்தனை உலகப்படங்கள் பார்த்து வருபவர்களுக்கு எதுவுமேவா நெருடவில்லை. பாட்டு, காமெடி ட்ராக் போன்ற தமிழ் சினிமாவின் வழமைகள் இல்லாததும், மிஷ்கினின் அடையாளமான மஞ்சள் புடவை இல்லாததும் ஒரு படத்தை  ̀உலகத்தர'மானதாக்கி விடுமா? இந்த  ̀இல்லாதது' என்பது எப்படி ஒரு படத்தின் சிறப்பாக முடியும் என்பது புரியவில்லை. கதையோடு ஒட்டிய உணர்வுகளை மிகைப்படுத்தும் வழமையான தமிழ் சினிமா மிகைநடிப்பை விட, கதாபூர்வமாக ஒட்டாத உணர்வுகளை வித்தியாசமாக மிகைப்படுத்தும் இப்பட காட்சிகள் ஏன் கொண்டாடப்படுகிறது? சமரசம் செய்யாமல் எடுத்திருக்கிறார், அதனால் பாராட்ட வேண்டும், குறை கண்டுபிடிக்க கூடாது  என்கிறார்கள். சமரசம் செய்யாமல் எதை அளித்தாலும் நாம் ஏற்கவேண்டுமா? சமரசம் செய்யாமல் எடுத்ததாக நினைப்பதால், குறைகளை கண்டுகொள்ளாமல் நாம் சமரசத்துடன் பார்க்கமுடியுமா?