Thursday, February 28, 2013

ஈழம்: நேற்றும், நாளையும்…


இந்த சமூகத்தில் நமக்கென்று நிறைய பொறுப்புகள் உள்ளன. ஆனால், விட்டேத்தியாகவே நாம் இருக்கிறோம். முக்கியமாக ஈழப் பிரச்சினையில் நம் ஒட்டுமொத்த தமிழர்களின் அனுகுமுறை கேலிக்கூத்தாகவே தொடர்கிறது. இந்திராகாந்தி, எம்.ஜி.ஆருக்குப் பின்னால் வந்த கருணாநிதி தொடர்ந்து ஈழப் பிரச்சினையை சுயலாபத்துக்காகவே அரசியலாக்குகிறார். அவரால் ஜெயலலிதா உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசியல்வாதிகளையும் ஒரு நேர்க்கோட்டில் கொண்டுவந்து இந்திய அரசாங்கத்துக்கு நெருக்கடியை தந்திருக்க முடியும். முள்ளி வாய்க்கால் முடிவுக்கு துணைபோன ஒரே காரனத்தால் தற்போது ஒட்டுமொத்த தமிழக மக்களாலும் வெறுக்கப்பட்டு எதிரியாக இருந்தாலும்  ஜெயலலிதாவே மேல் என அவருக்கு கடந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை மக்கள் வாக்களித்தனர். அதன் பின்னரும் மத்திய அரசாங்கத்தில் இருந்துகொண்டே ஈழத் தமிழர்கள் மேல் பாசம் காட்டுவதுபோல் டெசோ குப்பையை மீண்டும் தூசி தட்டியிருக்கிறார். என்னதான் இவர் குரல் கொடுத்தாலும் ஒட்டு மொத்த தமிழ் மக்களும் இவரை இப்போதும் வெறுக்கவே செய்கின்றனர்.

கிட்டதட்ட தி.மு.க வின் அடுத்த தலைவராக செயல்பட்டு வரும் மு.க.ஸ்டாலின் நினைத்தால் ஜெயலலிதா உள்ளிட்ட அனைத்து அரசியல் தலைவர்கள் கூட்டமைப்பில் ஒரு வலிமையான போர்க் குரலை மத்திய அரசாங்கத்துக்கு தெரிவித்து ஈழப் பிரச்சினையில் நாம் அனைத்து தமிழர்களும் ஒன்றாக இருக்கிறோம் என காட்ட முடியும். கருணாநிதி இப்போது அரசியல் ஓய்வு பெற்றாலொழிய இம்முயற்சி நடக்காது. அனைத்து அரசியல் தலைவர்களுமே ஈழப் பிரச்சினையில் ஒரு திசை நோக்கி நடந்தால் கருணாநிதி அதனை வேறொரு திசை நோக்கி நகர்த்துவார். விடுதலைப்புலிகள் மேல் உள்ள வெறுப்பைத்தான் சோனியாவும், கருணாநிதியும் ஒட்டு மொத்த ஈழத் தமிழர்கள் மேலும் காட்டுகிறார்கள்.

இணையத்தில் இயங்கும் சிலர் உ.பி க்கள் போர்வையில்(சிலர் தி.மு.க வில் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது) தொடர்ந்து ஈழப்பிரச்சினைக்காக குரல் கொடுக்கும்
நெடுமாறன், வைகோ, ராமதாஸ், சீமான், கொளத்தூர் மணி போன்றவர்களை கேலி பேசி வருகின்றனர். இந்த வெளெக்கெண்ணைகள்தான் மெரீனாவில் மெழுகுவர்த்தி ஏந்தினால் தனி ஈழம் கிடைத்து விடுமா? என கிண்டல் அடித்தனர். இதே வெளெக்கெண்ணெய்களின் தலைவர்தான் இப்போது நாலு பேரை கூட்டி வைத்து டெசோ மாநாடு என காமெடி செய்துகொண்டிருக்கிறார். நாலு மணி நேர உண்ணாவிரத்ததில் ஈழம் கிடைத்து விட்டது என போஸ்டர் ஒட்டியதும். ஆட்சியில் இருந்தபோது ஈழம் என்ற வார்த்தையை போஸ்டரில் கூட பயண்படுத்த விடாமல் தடுத்ததும் மக்கள் மறந்து போகவில்லை.

இதற்கு முன்னர் புலிகளை எதிர்த்த ஜெயலலிதா இப்போது மனசு மாறி ஈழப் பிரச்சினையில் தமிழர்கள் பக்கம் நிற்கிறார். தொடர்ந்து தனது உறுதியான நடவடிக்கைகளால் மத்திய அரசுக்கு மிகுந்த நெருக்கடிகளை தருகிறார். ஆனால் அதே மத்திய அரசாங்கத்தில் இருக்கும் உங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. கேட்டால் ஜெயலலிதாவும் கடிதம்தானே எழுதுகிறார் என்கிறீர்கள். உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா? முள்ளிவாய்க்கால் நிகழ்வின்போது பதவிக்காக உமது தலைவன் டெல்லியில் மன்றாடியது கேவலம் இல்லையா?
செத்துக்கொண்டிருந்த மக்களின் அவலத்தை உமது தலைவன் நடத்தும் தொலைக்காட்சி எந்த செய்தியும் வெளியிடவில்லையே. மக்கள் தொலைக்காட்சியை தவிர வேறெந்த தொலைக்காட்சியும் அப்போது எந்த செய்தியையும் காட்டவில்லையே. எப்போது கேட்டாலும் ஜெயா என்ன செய்தார். என் தலைவன் அரசு கலைக்கப்பட்டதே என பொங்கி வழியும் உங்கள் ஊளைக்குரல். உம் தலைவன் ஆதரவுடன் நடக்கும் மத்திய அரசுதான் எங்களுக்காக போரை நடத்தியது என பகிரங்கமாக கோத்தபாய சொன்னானே அப்போது ஏன் மவுனமாக இருந்தது?

போகட்டும் உங்கள் கைகளில் இருக்கும் ரத்தக் கறைகளை ஸ்டாலினாவது துடைப்பார் என இப்போதும் என்னைப்போல் சிலர் நம்புகிறோம். சமீப காலமாக அரசியலில் எல்லோருடனும் இனக்கமாக பழகும் ஸ்டாலின் நினைத்தால் அனைத்து அரசியல் தலைவர்களையும் ஒன்று திரட்டி ஒட்டு மொத்த தமிழ்க் குரலையும் ஒருங்கினைத்து ஒரு புதிய விடியலை படைக்கட்டும். தி.மு.க என்னும் மாபெரும் இயக்கம் லட்சக்கனக்கான அப்பாவி தொண்டர்களால் கட்டப்பட்டது. கருணாநிதி என்னும் சுயநலவாதியால் அது வீழ்ந்து கொண்டிருக்கிறது. தந்தை செய்த பாவம் மகனால் கழுவப்படும் என நம்புகிறோம்.