Wednesday, October 10, 2012

வெள்ளை இட்லி - அதிரடி அறிமுகம்



                                      வெண்ணிட்லியை தேடி ஒரு வெ(ற்)றிப்பயணம்

உணவு மற்றும் சாப்பாட்டிற்கான எனது தேடல் எப்போதும் பலப்பல பற்பல சுவாரஸ்யங்களால் நிறைந்து இருக்கும் என்பது இந்திய துணைக்கண்ட வாசகர்கள் நான்கு பேரும் நன்கு அறிந்ததே. இதுவரை நான் சென்ற அனைத்து கடைகளிலும் இட்லியை வட்டமாகவும், வெள்ளையாகவும் தந்தே வெறுப்பேற்றியதால் இம்முறை காஞ்சியில் எப்படியேனும் வித்யாச, மான முறையில் ஒரு இட்லியை குழைத்து அடித்து தங்கள் தூக்கத்தை குலைத்து பதிவிட முடிவு செய்தேன். 

                                                         

நான் கால்களால் நடந்து சென்ற வழியில் கண்ணில் பட்டது அதிசயம் passed புட். அகால மரணம் அடைந்த உணவிற்கு அதிசயம் என்று பெயர் வைத்து விற்பனை செய்வதா? எவ்வளவு கொழுப்பு இருக்க வேண்டும் அவனுக்கு. பேரன்பை கிடப்பில் போட்டுவிட்டு பெருங்கோபத்துடன் அந்த கடைக்குள் நுழைந்தேன். பிறகென்ன...அவன் என்னை அடிக்க, என்னை அவன் அடிக்க...ரெண்டு பேருக்கும் செம சண்ட. 'நா பாட்டுக்கு எண்ணறேன். நீ பாட்டுக்கு அடி' என்று கூறியதால் டயர்ட் ஆகி விட்டு விட்டான். நடக்குமா? தேக்குல செஞ்ச உடம்புலே!!                          
       

                                           
காஞ்சி பஸ் ஸ்டாண்ட் அருகே போனவாரம் வரை அமோக இட்லி வியாபாரம் செய்து கொண்டிருந்த ஓனர் என்னை கண்டதும் ஓட்டம் பிடித்தார். விரட்டி பிடித்து 'அண்ணே..உங்க ஓட்டலை பத்தி பெருமையா எழுதி இருந்தனே? இப்ப எப்படி போகுது யாவாரம்?' என்றேன். 'நாலு ஓசி இட்லி, ரெண்டு பக்கெட் சாம்பார் சாப்புட்டதோட போக வேண்டியதுதான? எவன்யா எழுத சொன்னது? லெப்டுல கீழ பாரு. பிசினெஸ் வயித்தால போயி இப்ப பிளாட்பாரத்ல இட்லி குண்டா சொப்பு விக்கிற கடை வக்கிற நிலைக்கு ஆயிட்டேன்யா' எனக்கதறினார். உங்களுக்கு மறுவாழ்வு கிடைக்க வேண்டுமெனில் எனக்கு 'பொன்னான வாழ்வே மண்ணாகி போச்சே..துயரம் இதுதானா' டைப்பில் ஒரே ஒரு பேட்டி மட்டும் தாருங்கள். ஓரிரவில் அதிசயம் நிகழும்' என்றதற்கு அதீத மௌனத்துடன் சில நொடிகள் இருந்துவிட்டு கணுக்காலில் விழுந்து 'ஒழுங்கா போயிரு. இடுப்ப ஒடிச்சி அடுப்புல சொருகிறுவேன்' என கூக்குரலிட்டு கண்ணீர் மழை பொழிந்தார். அந்தோ பாவம். மன்னித்து விட்டேன். மீண்டும் ஒயிட் கேக் (தட் மீன்ஸ் இட்லி) தேடல் தொடர்ந்தது.             
 
                                                               
வெள்ளைநிற ரவுண்டு இட்லி கடைக்கு வேகமாக செல்ல காஞ்சியில் இருந்த காஞ்சி ஆட்டோக்காரனிடம் பேரம் பேசினேன். அவன் தி.மு.க.காரன் என்பதால் 'இன்னா நெக்குலு இருந்தா வெள்ள இட்லி துன்ன ஆசைப்படுவ. அகுலு அவுலு வுட்டுக்கும். கட்சியோட 'புது கை' புதுகை அப்து அண்ணன் சொல்லிக்கீறாரு. இன்னும் ஒரு வருசத்துக்கு கறுப்பு இட்லிதான் துன்னனுமாம். அதை விக்கிறது நம்ம ஆளுதான். வரியா இட்டுனு போறேன்?'....அண்ணா பிறந்த பூமில அகராதி புடிச்ச பய புள்ளைக..!!     

                                                             
'ஏற்றுக்கொண்ட பதவிக்கெல்லாம் பெருமையை தந்தார். தன் இனிய குடும்பம் ஒன்றுக்குத்தான் லம்ப்பாக சொத்தினை தந்தார்' எனும் கலைஞர் ரீமிக்ஸ் பாடலை கேட்டவாறு கால்களால் நடந்து (ஹோட்டல்) சங்கீதாவை அடைந்தேன். காஞ்சி சங்கீதாவில் 'பெண் சப்ளையர்கள்' நிறைய உண்டு என்பதால் அங்கே உண்டு மகிழ முன்பே முடிவு செய்தேன்(ஆதாரம்: மேலே இருக்கும் படம்). 'என்ன சார் வேணும்?' என்று ஒரு ஆண் வந்து கேட்க மெல்லிய குரலில் 'பெண் சப்ளையரை வர சொல்லுங்க' என்று கிசுகிசுத்தேன். அவரோ மூர்க்கமாக 'கிசு கிசு பேசுறது தேன் மாதிரி இருக்கும் உனக்கு. பெண் சப்ளையர் உலவும் இடமென இதை நினைப்பது எதற்கு.' என எகிறலானார். அதிர்ந்த நான் 'உஸ்ஸு...உஸ்ஸு...ஏன் இவ்ளோ சத்தமா? பெண் சர்வர் இருக்காங்களான்னுதானே கேட்டேன்.நீங்க ஏன் தப்பா?'என ஆசுவாசப்'படுத்தினேன்'. இப்போதுதான் அந்த ட்யூப்லைட் பிரகாசமாக எரிந்தது.  

சில வெள்ளை இட்லிகள், வெள்ளை நிற தேங்காய் சட்னி, பச்சை வண்ண புதினா சட்னி, சூடான சாம்பார் நிறைந்த தட்டை டேபிளில் 'டொக்'கென வைத்து விட்டு டக்கென மறைந்து விட்டாள் அந்த பாவை. அடச்சே.... இங்கேயும் வட்ட வடிவ இட்லியா? வந்த  கோபத்திற்கு சென்ற அவளை அழைத்தேன்.

 'இட்லி வேண்டாம். சோலோ பூரி கொண்டு வாங்க'

'காலைல சோலோ பூரி எல்லாம் கிடைக்காது. பூரி செட்ல கொறஞ்சது ரெண்டு, மூணு பூரி இருக்கும். ஒரு சோலோ பூரி வாங்குனாலும் அதே பில்தான்'

'யார ஏமாத்தற. எத்தன ஓட்டல்ல லஞ்சுக்கு சோலோ பூரி தின்னுருப்பேன். பொம்பளையாச்சேன்னு 'பாக்கறேன்'. 

'அதான் வந்ததுல இருந்து பாக்கறியே. கண்ணுல காராபூந்திய வச்சி அடைக்க. யோவ் நீ சொல்லுறது சோலா பூரி. அது சோலோவா கெடைக்கும்.  காலைல போடுறது சின்ன பூரி'

'சோலோ..சோலா ..ம்ம். விடு. 'லோ' 'லா' வித்தியாசம்தான. லோலாயி மாதிரி அதுக்கு போயி ஏன் கத்தற? பசிக்குது. மணியோ பத்தற. என்ன விட்டுட்டு வேற டேபிளாண்டா ஏன் ரொம்ப நேரமா சுத்தற?'

'அட..நீங்க கவிஞரா?'

(நம்ம அருவாள சும்மாக்கண்டிதான் வச்சிருக்கோம்னு கண்டுபுடிச்சிட்டாளே).

'டெபனெட்லி. டெபனெட்லி'

'எத்தன பூரி வேணும்னாலும் துன்னுய்யா..காசு வோணாம்'

'ஏன்? இல்ல ஏன்னு கேக்கறேன்'

'ஏன்னா..ஏன்னா...'

'சொல்ரி கள்ளி'

'ஏன்னா....... நீதான்யா என் தேன்ன்ன்னன் அட!!'                
                                                               
                                               ஓட்டல் சங்கீதா கால் துடைப்பான்

சென்னை (ஓட்டல்) சங்கீதாவுடன் மீண்டும் சந்திப்போம்.


ஆக்கம், நெறியாள்கை மற்றும் (ரோல்) மாடல்:
கே.ஆர்.பி.செந்தில்
.....................................................................................