எங்கள் ட்ரை சைக்கிள் பயணம் முடிந்து ஹோட்டலுக்கு திரும்பினோம். ஆபீசர் வீட்டு மொட்டை மாடியில் ஓய்வெடுக்க சென்றேன். அங்கே இருந்து பார்த்தால் தார் ரோடு, பிளாட்பாரம் போன்றவை எல்லாம் பளிச்சென தெரிகிறது. என் கண்ணில் ஒரு படு கவர்ச்சியான மஞ்சள் நிற பூ ஒன்று தென்பட்டது. அதை ரசித்து கொண்டு இருக்கும்போது இரு பெண்கள் பறித்து விட்டனர். உடனே மாடியின் பின்பக்க குழாயில் இருந்து இறங்கி சென்று அவர்களை பார்த்து 'பூக்களைத்தான் பறிக்காதீங்க..காதலைத்தான் முறிக்காதீங்க' என இடுப்பை வளைத்து பெல்லி டான்ஸ் ஆடி அந்தப்பெண்களை கலவரப்படுத்தினேன். ஆனால் அவர்கள் அதை ரசிக்கும் ஞானம் இன்றி என்னை சந்து சந்தாக விரட்டி சுழற்றி சுழற்றி அடித்தனர். பிறகுதான் தெரிந்தது அவர்கள் பூ கட்டுபவர்கள் என்று. ஆபீசருக்கு படு குஷி. வீட்டில் இருந்த பூரிக்கட்டையை அவர்களிடம் தந்து 'இன்னும் நாலு மாத்து மாத்துங்க' என்றார்.
'துளசி வாசம் மாறலாம். தவசி வாக்கு மாறாது லேய்' என்பதை உணர்த்தும் விதமாக வீட்டில் ஒரு துளசி செடியை வளர்க்கிறார் ஆபீசர். அப்படியே அவர் வீட்டை ஏற இறங்க பார்த்து விட்டு 'நீங்க கட்டுன வீடு அருமை சார்' என்றேன். என்ன கோபமோ. சப்பென கன்னத்தில் அறைந்து விட்டார்.."எத்தனை தரம் சொல்றது..இது கொத்தனார் கட்டுன வீடுன்னு" என காண்டாகி கரடுமுரடாக கத்தி விட்டார். பொறுமை இழந்த நான் தரையில் புரண்டு அழ ஆரம்பித்தேன். சாரின் சமாதானத்திற்கு செவி சாய்க்கவில்லை. அதன் பின் கொத்தனார் அந்த வீட்டை கட்டிய ஸ்டில்லை விஜயன் எனக்கு காட்டினார்(ஸ்டில் கீழே). அதை கண்டபின் சற்று அமைதியானேன். பிறகு பக்கத்து வீட்டு பையனிடம்இருந்த பத்து தேன் மிட்டாயை பிடுங்கி தின்ற பிறகுதான் என் சினம் ஆறியது.
"இன்னொரு
தடவ பயணப்பதிவு போட்டா இதாலயே மண்டைய பொளந்துருவேன்"
அதன் பின் ஆபீசர் வீட்டு பணியாட்களுக்கு என் பயணப்பதிவு ஸ்டில்களை காட்டினேன். அத்தோடு லீவில் போனவர்கள் வேலைக்கு திரும்ப ஒரு மாமாங்கம் திரும்ப வரவே இல்லையாம்.
எனக்காக பஸ் ஸ்டாண்டில் கெடையாய் கெடக்கும் நாய் நக்ஸ்
'போதும் என் பொழப்ப கெடுத்தது' என்று டவேரா காரில் மூட்டை கட்டி என்னை கிளப்பினார் சார். 'மெட்ராசை சுத்தி பாக்க போறேன். மெரினாவில் வீடு கட்ட போறேன். லைட் அவுசில் ஏறி நிக்க போறேன். மங்காத்தா அஜீத் போல கண்ணாடி போட்டுட்டு வாரேன்' என்ற பாடலை முணுமுணுத்து கொண்டே அந்த பயணத்தை அனுபவித்தேன். டயராலும், பெட்ரோ லாலும் இயங்கிய அந்தக்கார் நெல்லை சந்திப்பை அடைந்தது. கார் கதவை திறந்து வெளியே வந்தேன். அப்போது தரையில் என் கால்கள் பதிந்தன. பகல் நேரம் என்பதால் சூரிய ஒளி எங்கும் நிறைந்து இருந்தது. நான் காலால் நடக்க ஆரம்பித்தேன். ரயில் நிலையத்தில் சில ரயில்களை கண்டேன். ஆனால் இப்படி ஒரு அதிர்ச்சியை நான் எதிர்பார்க்கவே இல்லை......
ஆம்...திருநெல்வேலி சந்திப்பு எனும் போர்டை கண்டதும் என் ரத்தம் கொந்தளித்தது. மனோ-ஆபீசர் சந்திப்பு என்று போடாமல் என்ன எகத்தாளம் இருந்தால் திருநெல்வேலி சந்திப்பு எனப்போடுவார்கள். விடுவதாக இல்லை நான். அடர்த்தியாக வானில் உலவிக்கொண்டு இருந்த கார் மேகங்களை ஒரு டஜன் கையில் எடுத்து வந்து அந்த போர்டை அளித்தேன். 'தில்லி சந்திப்பு' என பெயர் மாற்றி அந்த இடத்தில் இருந்து சிதறி ஓடி எனது ட்ரெயின் அருகே வந்து விட்டேன். பாவம்....தில்லிக்கு போக, வரவிருந்த ட்ரெயின்கள் எல்லாம் இந்தப்பக்கம் வந்து ஒரே ட்ராபிக் ஜாம். 'அய்...ஏமாந்தீங்களா' என்று வலது கை ஆட்காட்டி விரலை மடக்கி அங்கு அலைந்த வடநாட்டவரை வெறுப்பேற்றி கிண்டல் செய்தேன். ஹி..ஹீ....பிறகு மும்பை ரயிலை நோக்கி ஓடினேன். என்ன பார்த்த டி.டி.ஆர். "இனிமே நெல்லை பக்கம் வந்தா சொல்லுங்க...தண்டவாளத்துல போயி படுத்துக்கறேன்" என்று அன்புடன் வழியனுப்பி வைத்தார்...
டிக்கட் வாங்க காசின்றி புட்போர்டில் ஒரு பயணம்....
பயணம் முற்றும்...(உங்களுக்கும் முற்றி விட்டது எனும் நம்பிக்கையில்..)
நீங்கள் சகஜ நிலைக்கு திரும்ப ஆபீசர் தரும் டிப்ஸ்:
மனோ உங்கள் ஊருக்கு வந்தால் ரெண்டு நாள் உங்கள் முகம் இறுகி விடும் இல்லையா? அப்படி அவர் வந்தால் வெந்நீரை நன்றாக கொதிக்கவிட்டு அந்த அண்டாவில் அவரை ஆறுமணிநேரம் மிதக்க விடுங்கள். குறிப்பாக அவருடைய கேமராவை உருவி பேரிச்சம்பழ கடையில் போட்டு விடுங்கள். அவரை உடனே அனுப்பி விடாதீர்கள். ஒரு மாதம் நன்றாக ஊறப்போட்டு வெள்ளாவியில் வைத்து வெளுத்து போடுங்கள்.
டிஸ்கி:
இப்போது நீங்கள் படித்து பரவசம் அடைந்த நெல்லை பதிவு வெறும் டீசர் ட்ரெயிலர் தான் நண்பர்களே. இதை விட பத்துமடங்கு பெரிய பதிவு விரைவில். தலைப்பு : "ஆபீசர் வீட்டு கல்யாணம். எனது மெகா பயணம். நீங்கள் பணயம்"


