Thursday, November 14, 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்


ஓநாயும் ஆட்டுக்குட்டியும் வெளிவந்து ஒன்றரை மாதங்கள் ஆனபிறகு நேற்று அதனைப் பற்றி மூன்று அருமையான கட்டுரைகள் படிக்கக் கிடைத்தன.

1. வெகுளித்தனமல்ல அறியாமையின் கொடூரம் – ராஜன் குறை (காட்சிப்பிழை நவம்பர் 2013)
2. ஓநாயும்ஆட்டுக்குட்டியும் தவளைகளும் – ரோஸாவசந்த் (காட்சிப்பிழை நவம்பர் 2013)

மூவருக்கும் ‘மூக்கு’ புடைப்பாக இருக்கக்கூடும் என்பது என்னுடைய ஆகச்சிறந்த அவதானிப்பு. ஏன் சொல்கிறேன் என்றால் மூன்றுமே நல்ல கட்டுரைகள் என்றாலும் படித்ததும் சட்டென புரிந்துக்கொள்ள முடியாத அளவிற்கு ‘சொயட்டி சொயட்டி’ எழுதியிருக்கிறார்கள். யாருக்குமே புரியாம எழுதி அப்படி என்னடாப்பா சாதிக்க போறீங்க ? சுரேஷ் கண்ணன் நம்மாளு தான். முன்பெல்லாம் நல்லாத்தான் எழுதிக்கொண்டிருந்தார். யாரோ அவரை உயிர்மை, தயிர்மை’ன்னு செமயா ஏத்தி விட்டிருக்காங்க. இப்பல்லாம் மனிதர் புல்ஸ்டாப் வைக்காம ஒரே வாக்கியத்துல ஒரு நான்கு பக்க கட்டுரையை கட்டமைக்க முயன்றுக்கொண்டிருக்கிறார்.

சரி, கம்மிங் டூ த மேட்டர். நாம் பார்க்கும் திரைப்படங்கள் எதார்த்த வாழ்க்கைக்கு நெருக்கமாக இருப்பதையே நம்மில் நிறைய பேர் விரும்புவோம். ஃபேண்டசி, ஹாரர் போன்ற சில ஜானர்களை தவிர்த்து மற்ற படங்களில் லாஜிக் இருக்க வேண்டும் என்றே விரும்புகிறோம். ஆனால், பெரும்பாலும் தமிழ் சினிமாவின் கமர்ஷியல் சினிமாக்களில் அது இருப்பதே இல்லை. இல்லையென்பது கூட பரவாயில்லை, லாஜிக் இல்லையென்பதை சுட்டிக்காட்டுவதே பெரிய தவறாகி விட்டது. இணையத்தில் புழங்குபவர்களே ஏதோ இயக்குநருடன் ஒரே தட்டில் சாப்பிட்டவர்கள் போல தம் கட்டி வாதாடுகிறார்கள். மாஸ் படத்தில், மசாலா படத்திலெல்லாம் லாஜிக் பார்க்கக்கூடாதாம் ! எக்கேடோ கெட்டு ஒழியட்டும்.

ராஜன் குறை தன்னுடைய கட்டுரையில் ஒரு விஷயத்தை குறிப்பிட்டிருக்கிறார் :- தர்க்கரீதியான கேள்விகளையெல்லாம் வெகுஜன சினிமாவில் கேட்கக்கூடாது என்பது நியாயம்தான். ‘சிவாஜி தி பாஸ்’ படத்தில் தன்னைத்தானே எலக்டிரக்யூட் செய்துகொண்ட ரஜினியை அரைமணிநேரம் கழித்து நெஞ்சில் அயர்ன் பாக்ஸ் வைத்து பூப்போல ரகுவரன் காப்பாற்றவில்லையா ? அது மட்டும் நியாயமா என்று நீங்கள் கேட்கலாம். சரி அப்படிப்பட்ட மசாலா படம் தான் இது என்றால் கலையோ கலை என்று கூப்பாடு போடுகிறார்கள் என்றுதான் புரியவில்லை.

ராஜனின் மேற்கூறிய வரிகளிலிருந்து துவங்குகிறேன். ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு நல்ல பொழுதுபோக்கு சித்திரம் என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்துமில்லை. ஆனால் திடீரென ஏன் உலக சினிமா, கலை, பின்நவீனத்துவம் என்றெல்லாம் ஜல்லியடிக்கிறார்கள். அப்படியெல்லாம் சொல்லுமளவிற்கு ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் என்னதான் இருக்கிறது எனக்குப் புரியவில்லை. மூன்று கட்டுரைகளிலிருந்தும் எனக்குத் தெரிந்த தமிழில் நான் புரிந்துக் கொண்டவைகளை மட்டும் தொகுத்து சில கேள்விகளை முன் வைக்கிறேன். ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தை சிலாகிப்பவர்கள் பதில் சொல்லட்டும்.

1. ஒரு மனிதன் குண்டடி பட்டிருக்கிறான். அது உடலின் ஏதோவொரு பாகத்தில் பாய்ந்திருக்கிறது. குண்டை வெளியே எடுத்து ரத்த சேதத்தை நிறுத்தி கட்டு போட்டால் உயிர் காப்பாற்றப்படும். எதற்காக spleenஐ வெளியே எடுக்க வேண்டும் ? ஸ்ப்ளீன் கோபத்தின் பிறப்பிடம் என்று தவறாக நம்பப்பட்டதன் அடிப்படையில் அது குறியீடாக இருக்கிறதா ? ஸ்ப்ளீன் என்பது ரத்தத்தை சுத்திகரிப்பு செய்யும் உறுப்பு. அதில் போய் குண்டு மாட்டிக்கொண்டால் கடுமையான ரத்த சேதம் ஏற்படும். அந்த நிலையில் நோயாளியின் வயிற்றை அறுத்து ஸ்ப்ளீனை வெளியே எடுத்தால் ரத்த சேதம் அதிகரிக்கும். எனவே நோயாளிக்கு தேவை அவருடைய வகை ரத்தம். மாற்று ரத்தம் ஏற்பாடு செய்யாமல் ஸ்ப்ளீனில் அடிபட்டு அரைமணி நேரத்திற்கு மேல் உயிருக்கு போராடும் ஒருவனை எப்படி காப்பாற்ற முடியும் ?

2. மண்ணீரல் அகற்றப்பட்ட நபர் எட்டு நாட்களுக்குப்பின் எழுந்து நடமாடலாம் என்று படத்தில் இரு கதாபாத்திரங்கள் மூலம் சொல்லப்படுகிறது. ஆனால் உல்ஃப் ஆறாவது நாளிலேயே வெளியே வந்துவிடுவதாக கதை செல்கிறது. பிரச்சனை என்னவென்றால் உல்ப் அறுவை சிகிச்சை முடிந்து சில மணி நேரங்களுக்குள்ளாகவே சந்துருவின் வீட்டிலிருந்து வெளியேறி விடுகிறான்.

3. தன்னைக் காப்பாற்றிய சந்துரு என்கிற மருத்துவ மாணவனை வரவழைத்து, துப்பாக்கி காட்டி மிரட்டி, தன் உயிரை காப்பாற்றியனை பலவந்தமாக கடத்தி கொண்டு போகிறான்  வுல்ஃப்.  எதற்காகத்தான் அந்த பையனை கடத்துகிறான்? கதைப்படி அதற்கான தேவை என்ன? கதைப்படி வுல்ஃபின்  நோக்கம் யாருக்கும் எந்த சந்தேகமும் வராமல், கண்காணிப்பிற்கு ஆளாகாமல் அந்த அம்மா அப்பா ஆடுகளையும் குழந்தை ஆட்டுகுட்டியையும் அந்த 'ஹிந்திக்கார பார்ட்டி'யிடம் சேர்ப்பது; சேர்ந்து தானும் தப்பிப்பது; இடையில் கல்லறையில் ஒரு மெழுகுவர்த்தி பிரார்த்தனை. வுல்ஃப் ஆபேரேஷன் ஓய்வு நாட்கள் முடியும் முன்பு வெளியே வர மாட்டான் என்ற நம்பிக்கையில் போலீஸ் திவிரமாக கண்காணித்து கொண்டு இருக்க மாட்டார்கள். இடையில் ஆறாவது நாளே யாருக்கும் தெரியாமல் வுல்ஃப் தனது மேற்படி கடமையை முடிப்பது எளிதானது. ஆனால் அவனோ சந்துருவை கடத்துவதன் மூலம், ஒட்டுமொத்த போலீசின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பி, இரவுகளில் தான் இருக்கும் இடங்களை  ஊகிக்க விட்டு, தானிருக்கும் சுற்று வட்டாரத்தில் தேடவிட்டு, மாட்டிகொள்ளும் ரிஸ்க்கை காரணமே இன்றி எடுக்கிறான்.

4. ஒரு காட்சியில் ஓடிக்கொண்டிருக்கும் ரயிலிருந்து உடலில் காற்றடைத்த பையைக் கட்டிக்கொண்டு உல்ஃபும் சந்துருவும் குதிக்கிறார்கள். இந்த காட்சியை பார்க்கும்போது வடிவேலு மெத்தையை பாராசூட் போல கட்டிக்கொண்டு மாடியிலிருந்து குதிக்கும் நகைச்சுவை காட்சிதான் நினைவுக்கு வருகிறது. சரி, உல்ஃப் ஒரு சாகசக்காரன். அவன் அதையெல்லாம் அசால்டாக செய்வான் என்று வைத்துக்கொள்வோம். சந்துரு ? வெறும் தலையணையை மாரில் கட்டிக்கொண்டு குதித்தால் மூளை சிதறிவிடாதா ?

5. உல்ஃபின் நோக்கம் என்று பார்த்தால், அந்த அம்மா அப்பா ஆடுகளை, குழந்தை ஆட்டுக்குட்டியை காப்பாற்றுவது. மிஷ்கின் கண்ணிமைக்காமல் சொல்லும் அந்த கதையின் படி, தம்பா கும்பலுக்கும் அந்த ஆட்டுக் குடும்பத்திற்கும் எந்த பிரச்சனையும் இல்லை. பிரச்சனையே இந்த ஓநாய் மனம் திருந்தி அவர்களுடன் தங்குவதுதான். கதையிலேயே அந்த குடும்பத்தை பார்த்துகொள்ள பாரதி அக்கா, இரவில் கூட பாட்டுப்பாடிக் கொண்டிருக்கும் கண்தெரியாதவர்கள் சமூகமே இருக்கிறது. அவர்கள் வாழ்வதற்கு கண் தெரியாததை தவிர  வேறு  பிரச்சனை இருப்பதாக தெரியவில்லை. விபத்து போன்ற சம்பவத்தில் மகன் இறந்த பிறகான  வாழ்க்கையில் இருக்கும் தீவிர பிரச்சனை இந்த ஓநாய்தான். இந்த ஓநாய் கூட இருப்பதால்தான்,  ̀வேட்டைக்கு வாவேட்டைக்கு வா…' என்று வற்புறுத்தும் தம்பா அந்த குடும்பத்திற்கும் பிரச்சனை தருகிறான்.

6. மூன்று ஆட்டுக்குட்டிகளை காப்பாற்றுவதற்காக படமெல்லாம் எத்தனை ஆட்டுக்குட்டிகளை பலி கொடுக்கிறார் உல்ஃப். “தண்ணி... தண்ணி...” என்று துடிக்கும் போலீஸ் அதிகாரி, “ஐயா” என்று விளிக்கும் போலீஸ் அதிகாரி, மேலும் சில போலீஸ்காரர்கள், பாரதி அக்கா, விஜயா ஃபோரம் மால் காவலாளி, கடைசியில் அம்மா அப்பா ஆட்டுக்குட்டிகள்.

ரோஸாவசந்த் கட்டுரையிலிருந்து சில பத்திகள் :

உண்மையிலேயே இது ஒரு சுவாரசியமான வெகுஜன திரில்லராக இருந்தால் அது தன்போக்கில் ஹிட்டாகியிருக்கும். மக்களின் ரசனையின்மையை  திட்டவேண்டிய அவசியமே இருந்திருக்காது. வெகுமக்களை கவராத ஒரு படத்தை ஊடகங்கள், ஆர்வக்கோளாறு கொண்ட இணைய எழுத்தாளர்கள், பலூன் வண்ணத்தை பார்த்து மயக்கியவர்கள், உண்மையிலேயே படத்தின் ஒரே உன்னதமான இளையராஜாவின் இசைக்கு ரசிகர்கள் எல்லாம் சேர்ந்து ஏதோ ஒரு சென்சேஷன் அலையை உருவாக்கி, தாங்களும் அதில் மிதந்து படத்தை இந்த அளவிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். 

படத்தில் குறியீடுகள் பொங்கி வழிவதாக என்னவெல்லாமோ வியாக்யானம் சொல்கிறார்கள். முதலில் ஒன்றை தெரிந்துகொள்ளவேண்டும். சினிமாநாவல், சிறுகதை போன்ற ஒரு கதையாடல் சார்ந்த கலையில் கதைதான் முதலில் முக்கியமானது. கதை தீவிர இலக்கியமாக மாறும் போதுதான் குறியீடு பற்றி பேசுவதில் அர்த்தம் உண்டு. கோபால்ஜி உபன்யாசம் மாதிரி   ̀அப்படி பார்க்க கூடாதுஇதெல்லாம் குறியீடு' என்பது உளரல்.  கதை என்பது நேர்கோட்டில் இல்லாமல் இருக்கலாம்; சிதறலாக துண்டு துண்டான உளரலாக இருக்கலாம்; கதை என்று நாம் கருதிக்கொண்டிருக்கும் எதுவும்  இல்லாமல் கூட ஒரு கதை இருக்கலாம்; அதிலும்  கதையாடலைத்தான் நாம் முக்கியப்படுத்த வேண்டுமே தவிர குறியீட்டை அல்ல. கதை எந்த பிரச்சனையும் இன்றி தன்னை நிறுவிய பிறகுதான், அதில் உள்ள குறியீடுகளை பற்றி பேசமுடியும். ஒருவேளை கதையல்ல, குறியீடுகள்தான் படம் என்றால்நம்மால் ஒரு கதாதர்க்கமாக சிந்திக்கவே முடியாமல், கதையை மனதில் உருவாக்கவே முடியாமல் படிமங்களாக மட்டும் காட்சிகள் நகர்ந்திருக்க வேண்டும். மேலும் பலர் சொல்லும் குறியீடுகள்  பொருந்துவதில்லை என்பதுடன், குறியீடுகளின் அர்த்தங்கள் ஒன்றுக்கு ஒன்று அபத்தமாக முரண்படுகிறது. 

யோசிக்க யோசிக்க ஒரு கட்டுரையில் அடக்க இயலாதபடி முடிவே இல்லாமல் இந்த படத்தின் பிரச்சனைகள் வந்துகொண்டே இருக்கின்றன. இவ்வளவு சொதப்பலான கதையம்சம் கொண்ட படத்தை எதற்காக இத்தனை பேர் பாராட்டுகிறார்கள்காமிக்ஸ் என்கிறார்கள்; விவிலியத்தில் இருந்து மேற்கோள் காட்டுகிறார்கள்; அதிகாரம் பற்றியது, சாதாரணன் அதிகாரத்துக்கு எதிராக எதிர்வினையாற்றுவது என்று என்னவெல்லாமோ சொல்கிறார்கள். இவர்கள் பொய்யாக பாராட்டவில்லை என்பதுதான் அதிக கிலியை உண்டு பண்ணுகிறது. படத்தில் ஒரு மயக்கம் இருப்பது உண்மை என்றாலும், கருத்து சொல்லும் முன், கருத்தை தனக்குள் உருவாக்கும் போது யோசிக்க மாட்டார்களா? இத்தனை உலகப்படங்கள் பார்த்து வருபவர்களுக்கு எதுவுமேவா நெருடவில்லை. பாட்டு, காமெடி ட்ராக் போன்ற தமிழ் சினிமாவின் வழமைகள் இல்லாததும், மிஷ்கினின் அடையாளமான மஞ்சள் புடவை இல்லாததும் ஒரு படத்தை  ̀உலகத்தர'மானதாக்கி விடுமா? இந்த  ̀இல்லாதது' என்பது எப்படி ஒரு படத்தின் சிறப்பாக முடியும் என்பது புரியவில்லை. கதையோடு ஒட்டிய உணர்வுகளை மிகைப்படுத்தும் வழமையான தமிழ் சினிமா மிகைநடிப்பை விட, கதாபூர்வமாக ஒட்டாத உணர்வுகளை வித்தியாசமாக மிகைப்படுத்தும் இப்பட காட்சிகள் ஏன் கொண்டாடப்படுகிறது? சமரசம் செய்யாமல் எடுத்திருக்கிறார், அதனால் பாராட்ட வேண்டும், குறை கண்டுபிடிக்க கூடாது  என்கிறார்கள். சமரசம் செய்யாமல் எதை அளித்தாலும் நாம் ஏற்கவேண்டுமா? சமரசம் செய்யாமல் எடுத்ததாக நினைப்பதால், குறைகளை கண்டுகொள்ளாமல் நாம் சமரசத்துடன் பார்க்கமுடியுமா?

14 comments:

Anonymous said...

sidharth kandhasamy in fb

ஓநாயும், ஆட்டுக்குட்டியும், இளையராவின் இசையும்.
========================================

என் நினைவில் இளையராஜா இசையமைத்த எந்த ஒரு படத்திலும் அவரது பின்னணி இசை படத்தின் மீது கவனத்தை குவிக்க முடியாத அளவுக்கு தடையாய் இருந்ததே இல்லை. ஆனால், ஓநாயை முதல் முறை என் அபிமான சீசன்ஸ் (சத்யம்) திரையரங்கில் பார்த்தபோது அதுதான் நிகழ்ந்தது. படம் எனக்கு பிடித்தது. ஆனால், எந்த அளவு பிடித்தது என்று சொல்ல முடியாத அளவுக்கு பின்னணி இசை படத்தை ஆக்ரமித்து அதை பின்னுக்கு தள்ளிவிட்டது. பின்னணி இசையை முன்னணி இசையென்று குறிப்பிட்டதே பெரும்பிழையென்று நான் கருதுகிறேன். ஒரு திரைப்படத்துக்கு இசை என்பது பின்னணியில்தான் இருக்கவேண்டும். நாம் திரையரங்கு செல்வதே படம் பார்க்கத்தானே தவிர இசையை கேட்க அல்ல.

ஓநாயை பொறுத்தவரை இசை சரியில்லை என்று சொல்வதைவிடவும், ஒலியமைப்பு சரியில்லை என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். படத்தின் பின்னணி இசையை இப்படி வகைப்படுத்தலாம் : 1. நன்றாக இருந்த இடங்கள். 2. மோசமாக இருந்த இடங்கள். 3. இரைச்சலான இடங்கள். இசை சில இடங்களில் மோசமாய் இருந்தது என்பதைவிடவும், நிறைய இடங்களில் இரைச்சலாய் இருந்ததாலேயே படத்தை என்னால் முழுமையாக ரசிக்க முடியவில்லை.

முதல் முறை பார்த்தபோது படத்தின் ஒலி அளவை குறைத்திருந்தாலே (loudness) நன்றாயிருந்திருக்கும் என்று எனக்குத் தோன்றியது. இதை படத்தின் உதவி இயக்குனர்களே மிஸ்கினிடம் சொல்லியிருக்க முடியும். இதுபோக இரண்டு பேர் பேசிக் கொண்டிருக்கும் சாதாரண காட்சிகளில் கூட தேவையில்லாமல் இசை ஒலித்தது எனக்கு பெரிய அதிர்ச்சி. எந்த ஒரு இளையராஜா படத்திலும் இது நடந்ததில்லை. உலகப் படங்கள் பார்க்கும் வாய்ப்பு கிட்டியுள்ள உதவி இயக்குனர்கள் கூட அல்லது மிஸ்கினின் நண்பர்கள் கூட இந்த இரைச்சலான இசையை(ஒலியை) ஏன் தடுக்கவில்லை என்பது எனக்கு புரியாத புதிர்.

ஒருவேளை பிரச்சனை நான் பார்த்த திரையரங்கில் இருந்திருக்கலாம் என்று சந்தேகித்து இரண்டாவது முறை PVR திரையரங்கில் படத்தை பார்த்தேன். இம்முறை படத்தின் இரைச்சல் எனக்கு பழகி முன்பை விடவும் இசை(ஒலி) பரவாயில்லை என்று தோன்றியது. இருந்தும் படத்தின் இறுதி காட்சியின் இரைச்சலும், இன்னும் சில இடங்களின் இரைச்சலும் என் கருத்தை மாற்றவில்லை.

படத்தின் மிக முக்கியமான காட்சி மிஸ்கின் தன் வாழ்க்கையை உருவகப்படுத்தி கதையாய் சொல்லும் இடம். ஐந்து நிமிடங்களுக்கும் மேல் நீளும் இந்த காட்சியில் சுமார் நான்கு வெவ்வேறு இசை துணுக்குகள் ஒலிக்கும். என்னை பொறுமை இழக்கச் செய்த இடம் இது. மிஸ்கின் தன் அற்புதமான நடிப்பால் கதை மாந்தர்களை விலங்குகளோடு உருவகப்படுத்தி கதை சொல்ல, அதை ரசிக்கவிடாமல் இசை நம் கவனத்தை திசை திருப்பி அந்த காட்சியின் அழகையே கெடுத்துவிட்டது. இந்த இடத்தில் இசையே இல்லாமல் விட்டிருக்கலாம். அல்லது ஒரே ஒரு இசை துணுக்கை மிக மென்மையாக இசைக்கவிட்டிருக்கலாம்.

திரையுலகில் பணிபுரியும் இருக்கும் மாமல்லன் கார்த்தி தன் பதிவு ஒன்றில், விரும்பிய இடத்தில் இளையராஜாவின் இசை துணுக்குகளை பயன்படுத்திக்கொள்ள மிஸ்கின் அனுமதி வாங்கியுள்ளதாக எழுதியிருந்தார். இதனால் படத்தில் இடம்பெற்றிருக்கும் பின்னணி இசையை இறுதி செய்தது இளையராஜாவா அல்லது மிஸ்கினா என்று தெரியவில்லை. மிஸ்கின் ஒன்றும் இசை ரசனை இல்லாதவர் அல்ல. அவரது முந்தைய படங்களில் பின்னணி இசை சிறப்பாகவே அமைந்திருக்கிறது. வழக்கமான தமிழ்ப் படங்களைவிடவும் மிஸ்கினின் படங்கள் கொஞ்சம் மெதுவாகவே நகரும். ஓநாயும் அப்படிதான். இந்த அமைதியும், மிதவேகமும் ரசிகனை பொறுமை இழக்கச் செய்யலாம் என்று மிஸ்கின் நினைத்தாரா? அதனாலேயே மிகப் பெரும்பான்மை இடங்களில் இசை துணுக்குகளை போட்டு நிரப்பினாரா என்று தெரியவில்லை. சிங்கம் 2 போன்ற பேரிரைச்சல் படங்களை வெற்றிபெறச் செய்த தமிழ் ரசிகர்கள் மீது அவருக்கு நம்பிக்கையில்லையா?

Anonymous said...

எத்தனையோ படங்களை தன் அற்புதமான இசையால் தூக்கி நிறுத்தியிருக்கார் இளையராஜா. உதாரணம் கிழக்கு வாசல், கேளடி கண்மணி. இந்த இரண்டு படங்கள் போக இளையராஜா இசையமைத்துள்ள சுமார் பத்து படங்களின் பின்னணி இசையாவது எனக்கு அப்படியே மனப்பாடம். இதில் சில படங்களை நான் பார்த்து குறைந்தது இருபது வருடங்கள் இருக்கும். இருந்தும் எந்த இடத்தில் எந்த இசை வரும் என்று இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. குணா படத்தின் கருத்திசையை (theme music) யாரால் மறக்கமுடியும்? ஒரு ரோஜா தோட்டத்தை கடந்து போவது மாதிரியான இசையது. ஓநாயில் இளையராஜாவின் இசை முழுமையாக எடுபடாதது அவருக்கு எந்த விதத்திலும் அவமானமில்லை.

இதையும் தாண்டி, ஓநாயில் இடம்பெற்றிருக்கும் சில பின்னணி இசை துணுக்குகள் என்னை மிகவும் கவரவே செய்தன. இளையராஜாவின் தீவிர ரசிகர்கள் இந்த படத்தின் பின்னணி இசையை ஸ்லாகிப்பது இந்த சில இசை துணுக்குகளுக்காகவே இருக்கும் என்பது என் அனுமானம். அதில் ஒரு இடத்தைப் பற்றி பின்வரும் ஒரு பத்தியில் குறிப்பிட்டிருக்கிறேன். எனக்குப் பிடித்த இன்னொரு இடம் மிஸ்கின் ஆகியோரை பைக்கில் துரத்தி வரும் ஒரு அடியாளை மிஸ்கின் கொன்றவுடன், அவர் உடல் சாலையோரம் விழுந்து கிடக்கும் காட்சி. பின்னணி இசை ஒரே காட்சியில் முதல் பகுதி நன்றாகவும், பின்னர் மோசமாகவும் இருந்ததும் நடந்தது. ஒரு கல்லறை தோட்டத்தில் அந்த பார்வையற்ற தம்பதியர் தங்களது மகனின் கல்லறையை தொட்டுணரும் அந்த இடத்தில் இசை அருமை. சில நொடிகளிலேயே இசை மறுபடியும் இரைச்சலாக ஒலிக்க ஆரம்பித்தது. எனக்குப் பிடித்த மற்றொரு இடம் பார்வையற்றோர் சிலர் பாடும் "போகும் பாதை தூரமில்லை... வாழும் வாழ்க்கை பாரமில்லை..." என்ற பாடல். இந்த இடத்தில் காட்சியமைப்பும், அந்த பாடலும் ஒரு அற்புதமான உணர்வை எழுப்பியது. இந்த பாடலும், நான் குறிப்பிட்டுள்ள இசைத் துணுக்குகளும் என் காதுகளில் இன்னும் ரீங்காரமிடுகின்றன.

Anonymous said...

இனி படத்தைப் பற்றி.

ஓநாயை சிலர் அறிவுப்பூர்வமாய்(logic) அணுகி ஒதுக்குகிறார்கள் என்று அறிகிறேன். சினிமா என்பது நிஜ வாழ்க்கையல்ல என்கிற கசப்பான உண்மையை ஏற்றுக்கொண்டால்தான் நாம் சினிமாவை ரசிக்க முடியும் என்று நான் நம்புகிறேன். அது ஒரு பிரத்யேக வடிவம். யதார்த்த மீறல் இங்கே தர்மம். "யதார்த்தம் கெடாமல்..." என்கிற தமிழ் மீடியா உற்பத்தி செய்த சொற்றொடர் நம் மூளையில் நிரந்தரமாய் தங்கி சினிவாவை சரியான பார்வையோடு அணுக பெரும் இடைஞ்சலாய் இருக்கிறது. பொய்யை சொன்னால் கூட பொருந்தச் சொல் என்பதே சினிமாவின் இலக்கணம்.

தான் அமைக்கும் காட்சிகளை ஒரு ஓவியம் போல் தீட்டுவதில் வல்லவர் மிஸ்கின். அவரது படத்தின் ஒரு ஒரே ஷாட்டை மட்டுமே வைத்து இது மிஸ்கின் படம்தான் என்று நம்மால் சொல்லமுடியும். நான்கு சுவர்களுக்குள் நிகழும் காட்சியிலாவது, பெரிய அளவில் ஒளி அமைப்பு செய்யவேண்டியிருக்கும். ஒளியின் அளவை கூட்டுவது அல்லது குறைக்கும் விதத்திலும், அரங்கு பொருட்களை (set properties) ஒழுங்குபடுத்தியிருக்கும் பாணியிலும், இயக்குனர் தன் தடத்தை கண்டிப்பாய் விட்டுச் செல்வார். அதன்மூலம் இது யாருடைய படம் என்று நாம் சுலபமாக அனுமானிக்க முடியும். ஆனால் பட்டப்பகலில், வெளிப்புறம் நடக்கும் ஒரு காட்சியில் கூட, ஒளிப்பதிவாளர்கள் வேறு வேறு நபர்களாய் இருந்தாலும் நாம் பார்த்துக் கொண்டிருப்பது மிஸ்கின் படம்தான் என்று எப்படி தெரிகிறது? இதற்கு ஒரு தனித்துவம் வேண்டும். மணிரத்னத்துக்குப் பின் அப்படி ஒரு தனித்துவத்தை நான் மிஸ்கினிடமே காண்கிறேன். இந்த தலைமுறையின் சிறந்த இயக்குனர் என்று நான் நம்பும் வெற்றிமாறனிடம் கூட காணப்படாத தனித்துவமிது.

நண்பர் காலச்சுவடு செல்லப்பா காட்சிகளை தனித்துவத்தோடு உருவாக்குவது மட்டுமே சினிமா ஆகாது என்றார். என் கருத்தும் அதேதான். ஒரே ஒரு சொல் மட்டும் கவிதையாகிவிடாது; ஒரு குவளை நீர் ஆறாகிவிடாது; ஒரே ஒரு ஷாட்/காட்சி மட்டுமே திரைப்படமாகிவிடாது. சினிமா ஒரு நீரோட்டம் போன்றது. காட்சிகளின் இணைப்பிலும், அடுக்கும் முறையிலும் ஒரு உணர்வு (mood) உருவாகும். அந்த உணர்வே சினிமாவுக்கு அழகு சேர்க்கும். இல்லையேல், போலி பிம்பங்களால் கட்டப்பட்ட பிரதியாகவே சினிமா தோல்வியடையும். சில மணிரத்னம் படங்களை இதற்கு உதாரணமாய் கொள்ளலாம். திரையில் உணர்வை எழுப்பும் விஷயத்தில் மிஸ்கின் நிபுணர் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை.

Anonymous said...

சைதன்யாவின் தாய் மோனாவின் பாதங்களில் வில்லனின் ஆட்கள் சூடு வைத்துவிட, அதற்கு பழிவாங்கும் விதமாக அந்த அடியாட்களை அடித்து வீழ்த்தும் மிஸ்கின், பரபரவென்று அவர்களது சப்பாத்துகளை கழற்றி எறிவார். ஏன் இப்படி செய்கிறார் என்று நாம் பார்த்துக்கொண்டிக்கும்போதே, வாயில் கவ்வியிருக்கும் ஒரு கத்தியை எடுத்து, பலமாய் மூச்சிரைக்கும் மிஸ்கினை கேமரா இன்னும் கொஞ்சம் நெருங்கி, அவரது உடலை வெகு நெருக்கத்தில் காட்டும். ஒரு கணம் தாமதித்து, தலையை லேசாய் உயர்த்தும் மிஸ்கின் கத்தியை அந்த அடியாட்களின் பாதங்களை நோக்கி ஓங்குவார். அடுத்த ஷாட் மோனாவின் சூடுபட்ட பாதங்களை காட்ட, அதற்கடுத்த ஷாட் கனிவும் பரிதாபமும் தோய்ந்த அவரது முகத்தை காட்ட, பின்னணியில் அற்புதமான இசை! நடப்பவற்றை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகிற ஸ்ரீ, தலையை தாழ்த்தியவாறே தன் வேதனையை வெளிப்படுத்துவார். என்னை பரவசத்தில் கூவச் செய்யும் காட்சி இது. கண்ணீரை அடக்கவும் சிரமப்படுகிறேன். இந்த காட்சியில் கத்தியை ஓங்குவதற்கு முன் மிஸ்கினிடம் வெளிப்படும் நடிப்பு, தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த நடிகர்களில் ஒருவராக அவரை அடையாளம் காட்டுகிறது.

வன்முறையின் மீதான காதல் என்று தியாகராஜன் குமாரராஜா சொன்ன சொற்றொடர் என் நினைவுக்கு வருகிறது. இப்படி ஒரு வன்முறையின் அழகியலை ஆரண்யகாண்டம் தவிர (ஓரளவு விஸ்வரூபம்) எந்த ஒரு தமிழ்ப்படத்திலும் இதற்குமுன் பார்த்ததாக எனக்கு நினைவில்லை. இதே காட்சியை தமிழ் சினிமாவின் மற்ற பல வணிக/யதார்த்த பட இயக்குனர்கள் எப்படி எடுத்திருப்பார்கள் என்று கற்பனை செய்து பார்க்கிறேன். காட்சியை உருவாக்குவதோடு ஒரு இயக்குனரின் வேலை முடிந்துவிடுவதில்லை. எந்த இடத்தில் வெட்ட வேண்டும் என்பதையும் அவர் அறிந்துவைத்திருக்கவேண்டும். மிஸ்கின் கத்தியை ஓங்கும் அந்த கணத்தில் காட்சியை வெட்டியிருப்பார். இந்த வெட்டும் இதையடுத்து வரும் ஷாட் மாற்றமும் ஏற்படுத்தும் அழகை வர்ணிக்க எனக்கு வார்த்தைகள் சிக்கவில்லை.

கறுப்பு நகைச்சுவை என்று தமிழில் எதையெல்லாமோ கொண்டாடுகிறோம். இந்த வகைக்கான அற்புதமான காட்சி ஒன்றை படத்தில் கண்டேன். மிஸ்கினால் மீட்டப்படும் மோனா அவரிடம் "என்ன கடத்திட்டுப் போயி சூடு வச்சாங்க... வலி தாங்கல... நீ இருக்குற எடத்த சொல்லிடலாம்னு வாய் வந்துருச்சு... நல்லவேள... யாரோ ஒருத்தன் என் மாருல ஒதச்சான், நான் மயக்கமாயிட்டேன்" என்பார். மார்பில் உதைவாங்கி மயங்கிவிழுவதற்கு சந்தோஷப்படுகிறாள் அந்தப் பெண்! மிஸ்கின் மீது எனக்கிருக்கும் மரியாதையை பல மடங்கு உயர்த்திய காட்சி இது.

ஓநாய்களும், கரடிகளும், புலிகளும் ஆடும் ஆட்டத்தில் ஆட்டுக்குட்டியாய் சிக்கிக் கொள்ளும் அந்தக் குடும்பம் செய்த பாவம்தான் என்ன? ஏன் சிலரது வாழ்க்கையை விதி இப்படி கலைத்துப் போடுகிறது? தான் இறந்துபோவோம் என்ற நிலையிலும் யாரையும் காயப்படுத்த விரும்பாமல் மிஸ்கின் தன்னிடம் தந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுக் கொண்டே, இந்த சமூகம் மீதும், வன்முறை வாழ்க்கை மீதும் காறி உமிழ்கிறார் அந்த பார்வையற்ற மனிதர்! துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுடும்போது அவர் முகத்தில் மலரும் சிரிப்பும், அவரை இனிமேல் காப்பாற்ற முடியாது என்பது புரிந்து, இயலாமையோடு ஒரு மரத்தில் சாயும் மிஸ்கினை நமக்கு காட்டும் ஷாட்டும், மிஸ்கின் தமிழ் சினிமாவில் ஒரு அபூர்வ ஆளுமை என்பதை நமக்கு உணர்த்துகிறது.

Anonymous said...

இன்னொரு இடம்: மிஸ்கின், ஸ்ரீ, சைதன்யா ஆகியோரை கடத்திக் கொண்டு போகும் ஆதித்யா மேனனிடம் "நான் தம்பா கையால சாகக் கூடாது, என்ன கொன்னுடு" என்று மிஸ்கின் சொல்ல, காரை ஓட்டிக்கொண்டிருக்கும் ஸ்ரீ அதிர்ச்சியாய் திரும்பிப் பார்க்க, குழந்தை சைதன்யா "எட்வர்ட் அண்ணா..." என்று அவரை அழைக்கும் காட்சி. சைதன்யாவின் குரல் மட்டுமே கேட்கும், அவரது முகம் காட்டப்படாது என்பதுதான் அந்தக் காட்சியின் தனிச் சிறப்பு. "என்ன கொன்னுடு" என்று சொல்லும் அந்த இடத்தில் மட்டும் மிஸ்கினின் முகத்தை க்ளோஸ்-அப்பில் காட்டும் விதமும், அதில் அவரது நடிப்பும் ஏற்படுத்தும் தாக்கம் மிக அதிகம்.

இதுபோக அந்த பைக் துரத்தல் காட்சி. இது எல்லோருக்கும் மிகவும் பிடித்த காட்சி என்று நம்புகிறேன். இந்த காட்சியை காண்கையில் மிஸ்கின் வெகுஜன ரசனைக்கும் தீனி போடத் தெரிந்த ஒரு இயக்குனராக எனக்குத் தெரிகிறார். தமிழின் முன்னணி வணிக நாயகர்கள் மிஸ்கினின் திறமையை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

இதுபோல் இறுதி காட்சியில் வில்லனின் ஆட்கள் மிஸ்கின், மோனா, சைதன்யா ஆகியோரை தாக்க, பார்வையற்ற சைதன்யா ஏதோ விபரீதம் நடக்கிறது என்பதை அறிந்து, பீதியடைந்து அண்டிக் கொள்ள இடம் தேடுவார். குட்டி சைதன்யா தன் முகத்தில் காட்டும் பீதியும், அதைத் தொடர்ந்து ஒரு சுவற்றை நோக்கி சென்று, அதை தடவி அடையாளம் கண்டு சுவற்றின் ஓரத்தில் இருக்கும் தூணில் மறைந்து கொள்ளும் காட்சி. Mysskin, my boy! You are a class act man! I love you!!! சைதன்யாவின் தாயை வில்லனின் ஆட்கள் கொன்றுவிட, சைதன்யா மிஸ்கினிடம் என்ன ஆகிவிட்டது என்று கேட்க, மிஸ்கின் ஒரு கணமும் தாமதிக்காமல் "செத்துட்டாங்க" என்று கூறும் இடம். இந்த இடத்தில் மிஸ்கினின் முகத்தையோ, கண்களையோ காட்டாதது, தமிழ் சினிமாவின் மற்ற பல இயக்குனர்களுக்கு "மொக்கை போடாமல் உணர்வை எழுப்புவது எப்படி" என்பதற்கான பாடம்.

இந்த காட்சியில் மட்டுமின்றி, தான் தோன்றும் எல்லா காட்சிகளிலும் அதகளம் செய்திருக்கிறாள் குட்டி சைதன்யா. இந்த சிறுமியை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்து, அவரிடம் ஆட்டோகிராஃப்பும் வாங்கிக் கொண்டேன் என்பது எனக்கு பெரிய மகிழ்ச்சி மிஸ்கின் தீவிரமாய் சண்டை போட்டுக் கொண்டிருக்க, சைதன்யாவின் குட்டி உடல் இங்கேயும் அங்கேயுமாய் ஒரு ஊஞ்சல் போல் அசையும் அழகை slow motion மூலம் காட்டியிருக்கும் மிஸ்கினின் ரசனையே ரசனை! அவர் குழந்தைகளின்/பெண்களின் காதலர் என்பது நமக்கு தெரிந்ததுதானே? சண்டைக் காட்சிகளில் மிஸ்கினின் உடல் மொழியில் வெளிப்படும் அற்புதமான ஸ்டைல் நான் எதிர்பாராதது.

மிஸ்கின், ஸ்ரீ, குழந்தை சைதன்யா தவிர, ஏஞ்சல் கிளேடியின் நடிப்பும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. "கத சொல்லுங்க.." என்று கேட்கும் சைதன்யாவை வாரி அணைத்துக் கொள்ளும் இடத்தில் அவர் முகத்தில் தாய்மை பொங்குகிறது.

வெற்றிமாறன், மிஸ்கின், ராம் போன்ற நம் பிரியத்துக்குரிய ஆட்டுக்குட்டிகளை பெருவணிகம் என்கிற ஓநாய் விழுங்கிவிடாமல் காக்கும் பொறுப்பு ரசிகர்களாகிய நமக்கு நிறைய உண்டு.

வவ்வால் said...

பிரபா,

ஹி...ஹி நான் ஒரு ஓநாய் விமர்சனம் தயார் செய்துக்கிட்டு இருக்கேன் , கிட்டத்தட்ட அதே போல நிறைய ஒப்பீடுகள் பொருந்தி வருது, ரெண்டு மூனு டாகேஷ் கிட்டானோ படம் பார்த்துக்கிட்டு இருக்கேன் ,அப்புறமா விமர்சனத்தை முன் வைக்கலாம்னு வெயிட்டிங்,நாம என்ன முதல் நாள் முதல் ஷோ விமர்சனமா போடப்போறோம் அவ்வ்.

#//பாட்டு, காமெடி ட்ராக் போன்ற தமிழ் சினிமாவின் வழமைகள் இல்லாததும், மிஷ்கினின் அடையாளமான மஞ்சள் புடவை இல்லாததும் ஒரு படத்தை ̀உலகத்தர'மானதாக்கி விடுமா? இந்த ̀இல்லாதது' என்பது எப்படி ஒரு படத்தின் சிறப்பாக முடியும் என்பது புரியவில்லை. //

இதான் இப்படம் பார்த்தபோது எனக்கும் தோனிச்சு, பேரரசு வகையறா படங்களுக்கு எவ்விதத்திலும் குறைவில்லாமல் ஏகப்பட்ட தர்க்கப்பிழைகள் கொண்ட ஒரு படமிது, அமெச்சூர்கள் "இன்டிபெண்டன்ட்' மூவி என எடுப்பதுண்டு அதை ஒத்த ரகப்படைப்பு.

நல்ல பக்கா புரபஷனிலசத்தோடும் இண்டிப்பெண்டன்ட் மூவிக்கள் இருக்கு, ஆனால் பெரும்பாலும் அமெச்சூர் தனமாகத்தான் நிறைய இருக்கும்.

Philosophy Prabhakaran said...

எழுதுங்க வவ்வால்... Im waiting...

சீனு said...

ஆமா இந்த சீரியசான கட்டுரையை இங்கே பதிவிட்டதின் குறியீடு ஏன்னா பிரபா ?

! சிவகுமார் ! said...

//சுரேஷ் கண்ணன் நம்மாளு தான். முன்பெல்லாம் நல்லாத்தான் எழுதிக்கொண்டிருந்தார். யாரோ அவரை உயிர்மை, தயிர்மை’ன்னு செமயா ஏத்தி விட்டிருக்காங்க//

அதுவும் சர்தான். தமிழ்ல இதுவரைக்கும் ஒரு நல்ல படம் கூட வரலைன்னு போனம் மாசம் உயிர்மைல எழுதுனாப்ல. அவரேதான் ஆரண்ய காண்டம் 'தமிழ் சினிமாவுக்கு மஞ்சள் நீராட்டு விழா'ன்னு ப்ளாக்ல எழுதி இருக்காரு. ஒரே குஷ்டமப்பா!!

! சிவகுமார் ! said.../சீனு said...
ஆமா இந்த சீரியசான கட்டுரையை இங்கே பதிவிட்டதின் குறியீடு ஏன்னா பிரபா? /

ஓவர் மண்ட இருக்கறவங்க கூட சேந்து இந்த புள்ள இப்படி தர்சா போயிருச்சே??

காரிகன் said...

நல்ல கருத்து. இந்தப் படத்தை உலகத்தரம் என்று கொடி பிடித்தவர்கள் மிஷ்கினின் ரசிகர்களாக இருக்கவேண்டும். ஏகப்பட்ட குளறுபடிகளுடன் எந்தவிதமான நல்ல கதையம்சமும் இல்லாத வன்முறையை வளர்க்கும் மிஷ்கினின் மற்றுமொரு படைப்பு. அவ்வளவே. இசை ஒரு இம்சை. இளையராஜா பின்னணி இசை பொதுவாக ஏகத்துக்கு அதிரும். இதில் வயலினை வைத்துக்கொண்டு இரைத்திருக்கிறார் .இசை விழுங்கிய படம் என்று தாராளமாகச் சொல்லலாம்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யய்ய்யா சாமி இந்த குறியீடுகள்ல இருந்து யாராவ்து எங்கள காப்பாத்துங்கய்யா......

Manimaran said...

ஹா..ஹா.. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஏதோ பதினாறு ஆஸ்கார் அவார்டு வாங்கினது மாதிரி ஏன் தான் இந்த இலக்கியவாதிகள் இப்படிப் போட்டு கிழிக்கிறாங்கனே தெரியில... பாவம் அவரே வித்தியாசமா படம் எடுத்துவிட்டு தெருவில வந்து போஸ்டர் ஓட்டுற நிலைமைக்கு வந்துட்டார். ஆனால் ஒரு விஷயம் இந்தப் படத்தை அடித்துத் துவைப்பதின் மூலம் நிறைய பேர் தன்னை இலக்கியவாதியாக காட்டிக்கொள்ள முடிந்தது.

Manimaran said...


அடுத்து நானும் ஒரு பதிவு போடலாம்னு இருக்கேன்.. "ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒன்பதாயிரம் தர்க்கப் பிழைகளும்" :-))